சென்னை
மாநகராட்சி தற்காலிக ஊழியர் திடீர் சாவு: திருட்டு வழக்கில் போலீஸ் விசாரணைக்கு சென்று வந்தவர்
|திருட்டு வழக்கில் போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த சென்னை மாநகராட்சி தற்காலிக ஊழியர் திடீரென்று உயிரிழந்தார்.
சென்னை எம்.ஜி.ஆர். நகர் பம்மல் நல்லதம்பி தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 25). இவர், சென்னை மாநகராட்சியில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி பெயர் மஞ்சு. இவரது வீட்டின் அருகே விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். அவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுவிட்டார்.
பூட்டை உடைத்து வீட்டில் இருந்த தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுவிட்டனர். இதுதொடர்பாக விஜயலட்சுமி, எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஸ்ரீதர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இதனால் சந்தேகத்தின்பேரில் விசாரணைக்கு வரும்படி அவரை போலீசார் அழைத்தனர். ஸ்ரீதர் நேற்று தனது மனைவி மஞ்சுவோடு எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அவரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் நான் தங்கச்சங்கிலியை திருடவில்லை என்று ஸ்ரீதர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் அவரை விசாரணைக்கு அழைத்தால் வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் ஸ்ரீதர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக மனைவியிடம் கூறினார். இதனால் அவரை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பணியில் இருந்த டாக்டர், ஸ்ரீதருக்கு ஊசி போட்டு வாயுத்தொல்லைதான் என்று கூறி அனுப்பியதாக தெரிகிறது.
வீட்டுக்கு வந்தவுடன் மீண்டும் தனக்கு நெஞ்சு வலிப்பதாக ஸ்ரீதர் கூறி உள்ளார். மீண்டும் அவரை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் போகும் வழியிலேயே ஸ்ரீதர் இறந்துவிட்டார். அவரது உடல் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எம்.ஜி.ஆர். நகர் போலீசார் சந்தேக மரணம் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா நேரடி மேற்பார்வையில் அசோக்நகர் உதவி கமிஷனர் தனசெல்வன் நேரடி விசாரணை மேற்கொண்டுள்ளார்.
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கும் நேற்றிரவு அவர் வந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா கூறியதாவது:-
இறந்து போன ஸ்ரீதர் மீது நிறைய வழக்குகள் உள்ளது. இவர், ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தின் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். முதலில் இவர் ராயப்பேட்டையில் வசித்தார். பின்னர் அவர் எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள மனைவிக்கு வீட்டுக்கு போய் விட்டார். திருட்டு சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவில் ஸ்ரீதர் மட்டுமே உள்ளார்.
இதனால் அவரை சந்தேகப்பட்டு எம்.ஜி.ஆர். நகர் போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் அவர், விசாரணைக்கு உடனடியாக வரவில்லை. ஒரு நாள் கழித்து தான் விசாரணைக்கு ஆஜாரானார்.
எம்.ஜி.ஆர். நகர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் 15 நிமிடத்தில் விசாரணையை முடித்துவிட்டு ஸ்ரீதரை வீட்டுக்கு அனுப்பி விட்டார். விசாரணையின் போது அவரது மனைவி உடனிருந்துள்ளார். விசாரணை முடிந்து வீட்டுக்கு சென்ற ஸ்ரீதர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி உள்ளார். சரியாக அவர் சாப்பிடவில்லை. அவர் மீது போலீசார் தாக்குதல் எதுவும் நடத்தவில்லை. மேலும் அவர் நெஞ்சு வலிப்பதாக ஆஸ்பத்திரிக்கு சென்றபோது டாக்டரும் அவர் மீது தாக்குதல் நடந்ததாக கூறவில்லை.
சரியாக சாப்பிடாமல் அதிகளவு போதையில் இருந்ததால்தான் ஸ்ரீதர் இறந்துவிட்டதாக கே.கே.நகர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி டாக்டர் கூறி உள்ளார். இருந்தாலும் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ஸ்ரீதரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் தான், இது பற்றி அடுத்தக்கட்டமாக நடவடிக்கை எடுக்க முடியும். தற்போது வரையில் ஸ்ரீதர் உயிரிழப்பில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவர் வீட்டில் இருக்கும் போது தான் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால் ஸ்ரீதரின் மனைவி மஞ்சு, இன்ஸ்பெக்டர் கடுமையாக எச்சரித்தார் என்றும், இதனால் பயத்தில் இருந்த எனது கணவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் உயர் அதிகாரிகள் விசாரணையின் போது தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஸ்ரீதர் இறந்த சம்பவம் அவர் வசித்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.