கிருஷ்ணகிரி
காட்டு யானை மிதித்து கோவில் பூசாரி பலி
|காவேரிப்பட்டணம்:-
பாரூர் அருகே 'செல்பி' எடுக்க முயன்றபோது காட்டு யானை மிதித்ததில் கோவில் பூசாரி பலியானார்.
யானைகள் வந்தன
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் 2 காட்டு யானைகள் சுற்றி திரிகின்றன. இந்த யானைகள் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா பாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிக்குள் நுழைந்தன.
நேற்று காலை பாரூர் அருகே காட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்த எல்லப்பன் மகன் ராம்குமார் (வயது 27) என்பவர் மோட்டுப்பட்டி அருகே மலையடிவாரத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்றார்.
யானை மிதித்து பலி
அப்போது 2 காட்டு யானைகள் அந்த வழியாக வந்தன. யானைகளை பார்த்ததும் ஆர்வத்தில் அவர் அதன் அருகில் சென்று செல்போனில் 'செல்பி' எடுக்க முயன்றார்.
அந்த நேரம் 2 யானைகளில் ஒன்று வேகமாக ஓடி வந்து, ராம்குமாரை துதிக்கையால் தூக்கி வீசி மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
கோவில் பூசாரி
இந்த நிலையில் காட்டு யானை தாக்கி ராம்குமார் இறந்து கிடந்ததை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வனத்துறைக்கும், பாரூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் ராம்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பலியான ராம்குமார் அந்த பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் பூசாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.