< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

தபால் மூலம் வீடுதேடி வரும் கோவில் பிரசாதம்

தினத்தந்தி
|
26 May 2023 1:43 AM IST

தபால் மூலம் வீடுதேடி வரும் கோவில் பிரசாதம் குறித்து பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திருப்பதி கோவில் பிரசாதத்தை தபால் மூலம் பெறக்கூடிய வசதி இருப்பதுபோல், தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோவில் பிரசாதங்களை தபாலில் பெற்றுக்கொள்ள அறநிலையத்துறை ஏற்பாடு செய்திருக்கிறது. ஏற்கனவே சில கோவில்களில் நடைமுறையில் இருந்துவரும் இந்தத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படுகிறது.

இதன்மூலம் வீடுகளில் இருந்தபடியே இஷ்டமான கோவிலில் இருந்து பிரசாதத்தை பெறமுடியும். முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தமிழகத்தில் உள்ள 48 முதுநிலை கோவில் பிரசாதங்களை பக்தர்களின் வீடுகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டம் எந்த அளவில் பயனுள்ள வகையில் இருக்கிறது என்பது குறித்து விருதுநகரில் பக்தர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

அதன் விவரம் வருமாறு:-

வரவேற்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த கோவையை சேர்ந்த விஸ்வரூபன்:- ஆண்டாள் கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தோம். இந்த கோவிலில் நித்திய பூஜையில் பணம் கட்டினால் நமது பெயர் மற்றும் ராசிக்கு அர்ச்சனை செய்து நமது இல்லத்திற்கு பிரசாதம் அனுப்பி வைக்கின்றனர்.

திருமண நாட்கள், பிறந்தநாள் முக்கிய நாட்களில் நாம் பணம் கட்டினால் பிரசாதம் நம் வீட்டிற்கு வருவது மனதிற்கு சந்தோஷத்தை அளிக்கிறது. கோவில் பிரசாதம் வீடுகளுக்கு நேரடியாக கொண்டு ேசர்க்கும் திட்டம் உண்மையில் வரவேற்கதக்கது. கோவிலுக்கு வர முடியாதவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த திட்டத்தை அனைத்து ேகாவில்களிலும் விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீடுதேடி வரும் பிரசாதம்

ராஜபாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவி அங்காள ஈஸ்வரி:- புகழ்பெற்ற கோவில்களில் அர்ச்சனை செய்து தபால் மூலம் பிரசாதம் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் எல்லா கோவில்களுக்கும் நேரில் சென்று வழிபட்டு வருவதற்கு நேரமும், பணமும் செலவாகிறது. ஆதலால் நாம் வீட்டில் இருந்த படியே கடவுளை வணங்கி, தபால் மூலம் வீடுதேடி வரும் பிரசாதம் மூலம் மனநிறைவு கிடைக்கிறது.

நேரில் செல்ல முடியாத வயதானவர்களுக்கு தபால் மூலம் பிரசாதம் வருவது அவர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த திருப்தி கிடைக்கிறது. திருப்பதி கோவிலுக்கு நேரில் சென்றால் கூட மிக எளிதாக லட்டு கிடைப்பதில்லை. ஆனால் இன்று தபால் மூலம் லட்டு வீடு தேடி வருகிறது.

ரூ.50 கட்டணம்

விருதுநகரை சேர்ந்த இந்து சமய அறநிலையத்துறை அலுவலர் கூறுகையில், தமிழக அரசு 48 முதுநிலை கோவில்களில் இருந்து தபாலில் பிரசாதம் அனுப்ப ஏற்பாடு செய்துள்ளது அந்த வகையில் இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர் நிர்வாகத்தில் உள்ள கோவில்களிலிருந்து மட்டும் தபாலில் பக்தர்களுக்கு பிரசாதம் அனுப்பி வைக்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் மட்டும் தபாலில் பக்தர்களுக்கு பிரசாதம்அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் தினசரி பக்தர்கள் ஆன்லைனில் பிரசாதம் கேட்டு கட்டணத்துடன் விண்ணப்பித்தால் அவர்களுக்கு விபூதி, குங்குமம் மற்றும் அம்மனின் படம் அனுப்பி வைக்கப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் பிரசாதம் கேட்டு வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை மாறுபடும். வரும் விண்ணப்பங்களுக்கு ஏற்ப உடனடியாக மறுநாள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மூன்றாம் நிலை உதவிஆணையர் நிர்வாகத்தில் உள்ள நிலையில் தற்போது அங்கிருந்து தபாலில் பிரசாதம் பெற வசதி செய்யப்படவில்லை.

சிறிய கோவில்கள்

விருதுநகரை சேர்ந்த இல்லத்தரசி சுப்புலட்சுமி:-

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை மாநிலம் முழுவதும் 48 இந்து சமய அறநிலைத்துறை கோவில்களில் இருந்து மட்டும் தபாலில் பிரசாதம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளது. பக்தர்களாகிய எங்களுக்கு பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து பிரசாதம் பெற விருப்பம் உள்ளது. நேரடியாக செல்ல முடியாத நிலையில் தபாலில் பிரசாதம் அனுப்ப ஏற்பாடு செய்தால் வசதியாக இருக்கும்.

விசாரித்தபோது குறிப்பிட்ட கோவில்களில் மட்டும் இருந்து தான் இந்த ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தனர். ஆனால் பிரசித்தி பெற்ற கோவில்கள் மட்டுமல்லாது சிறிய கோவில்களாக இருந்தாலும் அந்தக் கோவில்களில் இருந்தும் பிரசாதம் பெற ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போது தான் நாங்கள் விரும்பும் கோவில்களில் இருந்து தபாலில் பிரசாதம் பெற வாய்ப்பு ஏற்படும். பிரசாதம் அனுப்பும் போது குங்குமம், விபூதி, சாமி படம் அனுப்பவது மட்டுமின்றி நைவேத்தியத்தையும் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு கூடுதல் கட்டணம் பெற்றுக் கொள்ளலாம்.

திருமண நாள்

இருக்கன்குடி கோவிலுக்கு வந்த தென்காசி அருகே உள்ள குத்துகல்வலசையை சேர்ந்த முருகேசன்:-

நான் ஆண்டுக்கு ஒருமுறை இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வேன். கோவிலுக்கு வர முடியாத சூழ்நிலைகள் ஏற்படும் பொழுது திருமண நாள், பிறந்தநாள் அன்று இணைய வழி மூலமாக பதிவு செய்து பிரசாதங்களை பெறுவது மன அமைதியை தருகிறது. இணைய வழி மூலம் பதிவு செய்யும் 2 நாட்களில் தபால் மூலம் பிரசாதங்கள் வந்து சேருவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

கோவிலுக்கு செல்வது குறைந்து போகும்

சென்னையை சேர்ந்த சந்திரசேகர்:-

நாங்கள் குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்கு வந்து செல்லும் போது இருக்கன்குடி கோவிலுக்கும் வருேவாம். நமது பண்பாடு, கலாசாரம் அனைத்தும் கோவிலுக்கு சென்று வழிபடுவதே சிறந்த முறையாகும்.

தபால் மூலம் ேகாவில் பிரசாதங்களை பெறுவது ஏற்புடையதல்ல. இதுபோன்ற திட்டங்களால் பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வதே இனி வரும் காலங்களில் குறைந்து போகும்.

விழிப்புணர்வு

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஓய்வு பெற்ற தபால் துறை அதிகாரி ராஜேந்திரன்:-

தபால் மூலம் கோவில் பிரசாதம் வழங்கும் திட்டத்தை வரவேற்கிறேன். கோவிலுக்கு வர முடியாதவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தை அனைத்து கோவில்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும்.

அத்துடன் இந்த திட்டம் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பயன்படுத்த வேண்டும்

விருதுநகர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை கோவில்களின் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கண்ணன்:-

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது பக்தர்களின் வசதிக்காக தபால் மூலம் வீடுதேடி வரும் கோவில் பிரசாதம் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பக்தர்கள் இந்த திட்டத்தை முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

வியாபாரம் பாதிப்பு

ராஜபாளையத்தைச் சேர்ந்த பூ வியாபாரி மாரிமுத்து:- புகழ்பெற்ற கோவில்களில் அர்ச்சனை செய்து தபால் மூலம் பிரசாதம் பெறுவது தற்காலிகமாக நடைமுறையில் இருந்து வருகிறது. ஏனெனில் கோவில் பிரசாதம் அனைத்தும் தபால் மூலம் கிடைப்பதால் நேரில் செல்லும்போது பூமாலைகள் எடுத்து சென்று தரிசனம் செய்வது குறைந்து வருவதால் எங்களை போன்ற பூ வியாபாரிகள் பாதிப்படைகின்றனர்.

எனவே திருமண நிகழ்ச்சி, கோவில் திருவிழாக்களுக்கு மட்டுமே பூக்கள் வியாபாரம் அதிகம் நடைபெறுகின்றன. மற்ற நாட்களில் பூக்கள் வியாபாரம் மந்தமான நிலையில் இருக்கும். ஆரம்ப காலத்தில் கோவிலுக்கு செல்லும் பொழுது பூமாலை வாங்கி சுவாமி சன்னதியில் செலுத்திய பின்னர் சுவாமி சிலைக்கு போட்ட பூ மாலைகளை வீட்டிற்கு கொண்டு வருவது வழக்கமாக இருந்தது. இப்போது அது தற்காலிகமாக குறைந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தபால்துறை

தபால்துறை அதிகாரிகள் கூறுகையில், வீடுகளுக்கு தபால் மூலமாக கோவில் பிரசாதம் வழங்கும் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் எண்ணற்ற பக்தர்கள் பயன்பெறுவதுடன், பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் பயன்பெற்று வருகின்றனர். விருதுநகர் மாவட்ட மக்கள் இந்த திட்டத்தை இன்னும் விரிவுப்படுத்த வேண்டும் என கூறியுள்ளனர். மொத்தத்தில் இந்த திட்டம் அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது என்றனர்.



மீனாட்சி அம்மன்

திருப்பூரை சேர்ந்த சுதாசுரேஷ் கூறுகையில், கோவில் பிரசாதம் தற்போது தபால் மூலம் வீடு தேடி வருகிறது என்றால் அது மிகவும் சிறப்பு. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த போது இந்த திட்டத்தை பற்றி என்னிடம் கூறினார்கள். உடனே அதற்கான பணத்தை கட்டி விட்டு சென்றேன். கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசிக்க முடியாமல் இருக்கும் அனைவரும் அந்த கோவிலின் பிரசாதம் வீடு தேடி வருவது சிறப்பு திட்டமாகும் என்றார்.


மேலும் செய்திகள்