பெரம்பலூர்
தபால் மூலம் வீடுதேடி வரும் கோவில் பிரசாதம்
|திருப்பதி கோவில் பிரசாதத்தை தபால் மூலம் பெறக்கூடிய வசதி இருப்பதுபோல், புகழ்பெற்ற கோவில் பிரசாதங்களை தபாலில் பெற்றுக்கொள்ள அறநிலையத்துறை ஏற்பாடு செய்திருக்கிறது.
கோவில் பிரசாதங்கள்
தமிழ்நாட்டில் பழனி தண்டாயுதசுவாமி கோவிலில் ஏற்கனவே நடைமுறையில் இருந்துவரும் இந்த திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படுகிறது. இதன் மூலம் வீடுகளில் இருந்தபடியே இஷ்டமான கோவிலில் இருந்து பிரசாதத்தை பெறமுடியும். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தமிழகத்தில் உள்ள திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில் மற்றும் கரூர் கல்யாண வெங்கடரமணசுவாமி கோவில் உள்பட 48 முதுநிலை கோவில் பிரசாதங்களை பக்தர்களின் வீடுகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டம் எந்த அளவில் பயனுள்ள வகையில் இருக்கிறது என்பது குறித்து பெரம்பலூர் மாவட்ட பக்தர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-
இறை நம்பிக்கை
அரியலூரை சேர்ந்த அசோக்:- கோவில்களுக்கு நாம் நேரடியாக சென்று இறைவனை வழிபட்டு, தீபாராதனை பார்த்து பெறப்படும் விபூதி, குங்குமத்தை நாம் நெற்றியில் பூசிக்கொள்ளும் போது பெரும் திருப்தி கிடைக்கும். தற்போது தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பில் முக்கிய கோவில் பிரசாதங்கள் தபால் மூலம் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. இவை ஆன்மிக முறைப்படி பூஜிக்கப்பட்டு பக்தர்களின் இறை நம்பிக்கை பாதிக்கப்படாத வகையில் வழங்க வேண்டும். விசேஷ தினங்களில் உரிய காலத்தில் பிரசாதம் கிடைக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அப்படி செய்தால் இந்த திட்டம் சிறப்பாக இருக்கும்.
விபூதி, குங்குமம் பிரசாதம்
பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் அசனாம்பிகை:- ஆதிசங்கரர் வழிபட்ட பெருமை பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் வாரந்தோறும் திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை, பவுர்ணமி தினங்களிலும், பண்டிகைகள் மற்றும் விசேஷ தினங்களில் மட்டுமே திறக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 5-ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அஞ்சல்துறை தொடங்கியது முதல் தபாலில் மணியார்டரில் பக்தர்கள் இக்கோவில் நிர்வாகத்திற்கு பணம் அனுப்பி வருகின்றனர். பக்தர்கள் பணம் அனுப்பினால் அவர்களது முகவரிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் விபூதி, குங்குமம் பிரசாதம் அனுப்பி வைப்பது தற்போது வரை நடைமுறையில் உள்ளது. மாதந்தோறும் ஏறத்தாழ 150 மணியார்டர்கள் இக்கோவிலுக்கு வரப்பெறுகிறது. குறைந்தது ரூ.50 முதல் ஆயிரம் ரூபாய் வரை சேவார்த்திகள் பணம் அனுப்புகின்றனர். இக்கோவிலில் ஆன்லைனில் பணம் செலுத்துவோருக்கு பிரசாதம் அனுப்புவது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. சேவார்த்திகள் சிலர் ஆன்லைன் மூலம் கோவிலின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்புகின்றனர். அவர்களது பெயருடன், முழு முகவரியையும் கோவிலுக்கு பணம் அனுப்பிய விவரத்தை கோவில் நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்தால், அவர்களுக்கும் விபூதி, குங்கும பிரசாதம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும்.
கூட்ட நெரிசல்
அரும்பாவூரை சேர்ந்த ராஜேந்திரன்:- தமிழகத்தில் உள்ள முக்கியமான கோவில்களிலிருந்து ஆன்லைன் மூலம் வீட்டிற்கு பிரசாதம் அனுப்பி வைக்கப்படுவது வரவேற்கத்தக்கது. குறிப்பாக கோவில்களுக்கு வந்து சில சமயங்களில் கூட்ட நெரிசல்களில் சிக்கி தவிப்பது, வயது முதியவர்கள் கோவிலுக்கு வர முடியாத சூழ்நிலையிலும் கோவில் பிரசாதம் கிடைக்கப்பெறுவது சிறப்பான ஒன்று. அதே சமயத்தில் கோவில்களுக்கு நேரில் சென்று பிரசாதங்களை நேரில் வாங்குவது கூடுதலான மன நிறைவு கொடுக்கும் என்பது சந்தேகம் இல்லை. அதே சமயத்தில் சூழ்நிலை காரணமாக கோவில்களுக்கு வர இயலாதவர்களுக்கு இதுபோன்று ஆன்லைன் மூலம் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படுவது மகிழ்ச்சியை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
தபால்துறை
தபால் துறை அதிகாரிகள்:- பக்தர்களின் வீடுகளுக்கு கோவில் பிரசாதம் வழங்கும் திட்டம் நல்ல முன்னெடுப்பாகும். இதன் மூலம் அறநிலையத்துறை மட்டும் அல்லாது தபால் துறைக்கு வருமானம் கிடைக்கும். பக்தர்களுக்கும் மனநிறைவு ஏற்படுகிறது. அதுவும் அனைத்து கிராம அளவில் தபால் அலுவலகங்கள் இருப்பதால் தமிழகத்தின் எந்த மூலைமுடுக்குகளிலும் இருப்பவர்களுக்கு தபால் துறையால் பிரசாதத்தை கொண்டு சேர்க்க முடியும்.
இதுகுறித்து தபால் துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் போதிய அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன. இதனை பொதுமக்கள் நன்கு பயன்படுத்தி கொள்ளலாம். விரைவான சேவை வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை செய்து பக்தர்கள் நலன் கருதி முடிவு எடுக்கப்படும்.
அறநிலையத்துறை
இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரி:- தமிழ்நாட்டில் உள்ள 48 முதுநிலை கோவில் பிரசாதங்களை பக்தர்களின் வீடுகளுக்கு தபால் துறை மூலம் அனுப்பி வைக்கும் திட்டத்திற்கு பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. பிரசாதம் தேவைப்படும் பக்தர்கள் அந்தந்த கோவில் இணையதள முகவரிக்கு சென்று கோவில் முகவரியை பெற்றுக்கொண்டு, அதில் வீட்டு முகவரி மற்றும் ஆன்லைனில் கட்டணத்தை செலுத்த வேண்டும். ஓரிரு நாட்களில் பிரசாதம் பக்தர்களின் வீடு தேடி வரும். இதற்காக ஒவ்வொரு கோவிலிலும் தனியாக பணியாட்கள் நியமிக்கப்பட்டு திட்டம் திறம்பட செயல்படுத்தப்படுகிறது. கட்டணத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு கோவிலுக்கும் மாறுபடுகிறது.
குறிப்பாக மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு ஆன்லைன் மூலம் ரூ.80 அனுப்பினால் விபூதி, குங்குமம் பிரசாதம் வழங்கப்படுகிறது. திருவல்லிகேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில் ரூ.80 கட்டணம் செலுத்தினால் பார்த்தசாரதி பெருமாள் சுவாமி படம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்படுகிறது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ரூ.250 செலுத்தினால் பஞ்சாமிர்த டப்பா, விபூதி, குங்குமம், விபூதி, குங்குமம், சந்தனம் மற்றும் கோவில் பூஜை முறைகள், ஸ்தல வரலாறு, பூஜைகளுக்கான கட்டண விவரம் அடங்கிய புத்தகம் அனுப்பப்படுகிறது.
அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் பிரசாதம் தேவைப்படுபவர்கள் ஆன்லைன் மூலம் ரூ.160-ஐ கோவிலுக்கு ஆன்லைன் மூலம் செலுத்தினால் 150 கிராம் எடையுள்ள 10 தட்டு வடை, விபூதி, குங்குமம், ஆஞ்சநேயர் சாமியின் உருவப்படம் ஆகியவை பிரசாதமாக அனுப்பி வைக்கப்படும். பிரசாதங்களை உடனுக்குடன் அனுப்பினால் துறையின் நற்பெயர் பாதுகாக்கப்படும். திட்டம் நூறு சதவீதம் வெற்றி பெறுவதுடன், பணம் செலுத்த பிரசாதம் வாங்கும் பக்தர்களுக்கு மனநிறைவை தர வேண்டும். அதற்கான உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அனைத்து இணை-கமிஷனர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து மேலும் அதிக எண்ணிக்கையிலான கோவில்களில் பிரசாதம் அனுப்பும் திட்டம் விரிவுப்படுத்தப்படும். பக்தர்கள் தங்கள் திருமண நாள், பிறந்த நாள், பெற்றோர்கள் பிறந்த நாள், கணவன்-மனைவி- குழந்தைகள் பிறந்த நாட்களில் விரும்பும் கோவில்களின் (48 கோவில்கள்) பிரசாதங்களை தபாலில் பெற்று இறையருள் பெறலாம். இந்த திட்டம் மூலம் கோவிலுக்கு வருமானமும் வரும், பக்தர்களுக்கு மனதிருப்தியும் ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.