< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்குகோவில் நிலம் 30 ஆண்டுகளுக்கு வாடகைக்கு கொடுக்கப்படும்  ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்குகோவில் நிலம் 30 ஆண்டுகளுக்கு வாடகைக்கு கொடுக்கப்படும் ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்

தினத்தந்தி
|
8 Dec 2022 12:15 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்காக அர்த்தநாரீஸ்வரர் கோவில் நிலம் 30 ஆண்டுகளுக்கு வாடகைக்கு கொடுக்கப்பட உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தனியாக பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு புதிய கலெக்டர் அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்காக வீரசோழபுரத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 28-ந் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நிலம் காலவரம்பு இல்லாமல் குத்தகைக்கு விடப்படுகிறதா என்பது குறித்து விளக்கமளிக்க அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

30 ஆண்டுகள்

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அர்த்தநாரீஸ்வர் கோவில் செயல் அலுவலர் மற்றும் கள்ளக்குறிச்சி கலெக்டர் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்த பத்திரம் அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'கோவிலுக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலம் 30 ஆண்டுகளுக்கு வாடகைக்கு விடப்படும். மாதம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வாடகை செலுத்த வேண்டும். இந்த வாடகை தொகையை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுநிர்ணயம் செய்ய வேண்டும். இந்த நிலத்தை வேறு நோக்கத்துக்காக பயன்படுத்தக்கூடாது' என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்தன.

தள்ளிவைப்பு

அதை படித்துப் பார்த்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பான பிற வழக்குகள் பட்டியிலிடப்படாததால் அனைத்து வழக்குகளையும் சேர்த்து பட்டியலிடும்படி ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர். விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்