திண்டுக்கல்
திண்டுக்கல் மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
|திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் பிரசித்திபெற்ற காளியம்மன், பகவதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தது. திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி கடந்த 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) குடவழிபாடுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. பின்னர் கணபதி வழிபாடு, நவகோள் வேள்வி, நூல்வழிபாடு, பரிவார வேள்வி, நான்மறை விண்ணப்பம், புனிதநீர் குடம் ஊர்வலம் வருதல் உள்ளிட்ட 6 கால வேள்வி பூஜைகள் நடந்தது.
இந்தநிலையில் நேற்று காலை புனிதநீர் அடங்கிய குடங்கள் புறப்பாடாகி கோவில் கோபுரத்துக்கு சென்றடைந்தது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க 57 அடி உயர ராஜகோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் காளியம்மன், பகவதியம்மன், லட்சுமி விநாயகர், சாலை கருப்பணசுவாமி, தட்சணாமூர்த்தி, காவல்கருப்பு, சப்த கன்னிமார்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தீபாராதனை நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியார்கள் நாகராஜ், சரவணன் ஆகியோர் நடத்தினர்.
இந்த கும்பாபிஷேகத்தில் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை ஊர் நாட்டாண்மை அழகர்சாமி தொடங்கி வைத்தார். இதில், அமைச்சர் இ.பெரியசாமி, இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், ஆயர் தாமஸ்பால்சாமி, மேட்டுப்பட்டி பங்குதந்தை செல்வராஜ், கோவில் பூசாரிகள் காளிதாஸ், கைலாசபதி, நிர்வாகிகள் முருகேசன், கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.