திண்டுக்கல்
திண்டுக்கல் வாழைக்காய்பட்டி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
|திண்டுக்கல் வாழைக்காய்பட்டியில் உள்ள காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திண்டுக்கல்லை அடுத்த வாழைக்காய்பட்டியில் காளியம்மன், பகவதியம்மன், மாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை கணபதி பூஜையுடன் யாக சாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. தொடர்ந்து தீபாராதனை, பூர்ணாகுதி, கடம் புறம்பாடு, தீர்த்தக்குட ஊர்வலம் ஆகியவை நடைபெற்றன.
இந்தநிலையில் நேற்று காலை 8 மணி அளவில் மேட்டுக்கடை திருவேங்கடஜோதி பட்டாச்சாரியார், கோவில் கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். அப்போது அங்கு குவிந்திருந்த பக்தர்கள் 'ஓம் சக்தி, பராசக்தி' என பக்தி கோஷமிட்டு வழிபாடு செய்தனர். மேலும் கும்பாபிஷேகத்தின்போது வானில் கருடன் வட்டமிட்டது. இந்த விழாவில் வாழைக்காய்பட்டி ஊர் முக்கியஸ்தர்கள், ஊர் பொதுமக்கள், இளைஞர் சங்கத்தினர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.