< Back
மாநில செய்திகள்
சண்முகசுந்தரபுரம் காளியம்மன், பெருமாள் கோவில்களில் கும்பாபிஷேகம்
தேனி
மாநில செய்திகள்

சண்முகசுந்தரபுரம் காளியம்மன், பெருமாள் கோவில்களில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
25 May 2023 2:30 AM IST

ஆண்டிப்பட்டி அருகே சண்முகசுந்தரபுரத்தில் உள்ள காளியம்மன் கோவில் மற்றும் வரதராஜப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஆண்டிப்பட்டி அருகே சண்முகசுந்தரபுரத்தில் பிரசித்திபெற்ற காளியம்மன் கோவில் மற்றும் வரதராஜப்பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இந்தநிலையில் புனரமைப்பு பணிகள் முடிவடைந்ததை அடுத்து நேற்று 2 கோவில்களிலும் தனித்தனியாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக ஆகம விதிப்படி 3 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனிதநீர் அடங்கிய குடங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது. அதன்பிறகு கோவில்களின் கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அப்போது கருடன்கள் வானில் வட்டமிட்டன. கும்பாபிஷேகத் ைதயொட்டி காளியம்மன், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.

இதில், தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ஒரேநாளில் 2 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றதால் சண்முகசுந்தரபுரம் கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பின்னர் அன்னதான குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் ஊர் நாட்டாண்மை ரத்தினவேல், சின்ன நாட்டாண்மை சவுந்தரராஜன், ஜெயசுதா கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் வேலுச்சாமி, அ.ம.மு.க. ஒன்றிய துணை செயலாளர் அய்யனன், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் குருசாமி, ம.தி.மு.க. பேரூர் செயலாளர் ரத்தினவேல், ரியல் எஸ்டேட் அதிபர்கள் குமார், செல்வம், புரவி டைல்ஸ் உரிமையாளர் ஜெகதீஸ்வரன், பந்தல் காண்ட்ராக்டர் பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்