தேனி
உப்புக்கோட்டையில் வளரி, வேல் கம்புடன் கள்ளர் வேடத்தில் பெருமாள் வீதிஉலா
|உப்புக்கோட்டையில் சித்திரை திருவிழாவையொட்டி வளரி, வேல் கம்புடன் கள்ளர் வேடத்தில் பெருமாள் வீதிஉலா வந்தார்.
உப்புக்கோட்டையில் பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியையொட்டி சித்திரை திருவிழா 3 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 4-ந்தேதி தொடங்கியது. அப்போது கள்ளழகர் வேடத்தில் வரதராஜபெருமாள் எழுந்தருளினார். பின்னர் நேற்று முன்தினம் காலை சுவாமி கோவிலில் இருந்து புறப்பாடாகி முல்லைப்பெரியாற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதிஉலா வந்தார்.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தநிலையில் சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியாக புராண வரலாற்றின்படி கள்ளர் வேடத்தில் பெருமாள் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி, வரதராஜபெருமாள் நேற்று வளரி, வேல் கம்பு ஏந்தி கள்ளர் வேடத்தில் உப்புக்கோட்டையில் வீதிஉலா வந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெற்றது.