திண்டுக்கல்
தி.கூடலூர் பூவாளம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
|குஜிலியம்பாறை அருகே தி.கூடலூர் பூவாளம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
குஜிலியம்பாறை அருகே தி.கூடலூரில் பூவாளம்மன் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த இந்துசமய அறநிலையத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்றது. அந்த பணிகள் நிறைவடைந்ததை அடுத்து கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், விநாயகர் பூஜை, தனபூஜை, சங்கல்பம், சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம், காயத்ரி மந்திர ஹோமம், யாகசாலை பிரவேசம், மண்டப பூஜை, பஞ்சகவ்ய பூஜை உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு மேளதாளங்கள் முழங்க புனிததீர்த்த குடங்கள் கோபுர கலசங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதில் குஜிலியம்பாறை, தி.கூடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் தி.கூடலூரில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அலுவலர்கள், தக்கார் முருகன், திருப்பணிகுழு தலைவர் பழனிசாமி, ஊர் பெரியதனங்கள் ராமமூர்த்தி, சிவபெருமாள், எட்டுப்பட்டி பெரியதனம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.