திண்டுக்கல்
நத்தம் பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
|நத்தம் வெட்டுக்கார தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நத்தத்தில், வெட்டுகாரத்தெருவில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி அனுக்கை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்துசாந்தி, முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து 2-ம் கால யாகசாலை பூஜைகளும், அம்மனுக்கு மண்டப சாந்தி, கோ பூஜை, மஹா பூர்ணாகுதி, தீபாராதனைகள் நடைபெற்றது.
இந்தநிலையில் நேற்று மேளதாளம் முழங்க யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த அழகர்மலை, கரந்தமலை, காசி, ராமேசுவரம், வைகை, திருமலைக்கேணி உள்ளிட்ட பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்கள் கோவில் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனிதநீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதில் நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் நத்தம் ஒன்றியக்குழு தலைவர் கண்ணன், திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. பொருளாளர் விஜயன், பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா, முன்னாள் தலைவர் சிவலிங்கம், பிரேமா விஜயன், பேரூராட்சி கவுன்சிலர்கள் கண்ணன், உமாமகேஸ்வரி ராஜாராம் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வெட்டுக்காரத்தெரு, செட்டியார்குளத்தெரு பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.