< Back
மாநில செய்திகள்
பழனி மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழாவையொட்டி திருக்கல்யாணம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

பழனி மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழாவையொட்டி திருக்கல்யாணம்

தினத்தந்தி
|
8 March 2023 2:00 AM IST

பழனி மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழாவையொட்டி திருக்கல்யாணம் நடைபெற்றது.

பழனி கிழக்கு ரதவீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசித்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான மாசித்திருவிழா கடந்த மாதம் 17-ந்தேதி முகூர்த்தக்கால் நாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த மணமேடையில் வைத்து அம்மனுக்கு 16 வகை அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து திருக்கம்பத்தை சிவனாக பாவித்து மலர்கள், அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு மங்கல நாண் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், திருமண நிகழ்ச்சியை நடத்தினார். இதில் பழனி முருகன் கோவில் இணை ஆணையர் நடராஜன், கண்காணிப்பாளர் அழகர், கோவில் அலுவலர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற தீர்த்தக்குடம், மாவிளக்கு, அக்னிசட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவில் இன்று (புதன்கிழமை) சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. மேலும் நாளை மாரியம்மன் நீராடல் நிகழ்ச்சியும், அன்றைய தினம் இரவு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Related Tags :
மேலும் செய்திகள்