< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம்

தினத்தந்தி
|
4 March 2023 2:00 AM IST

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது.

மாசித்திருவிழா

புகழ்பெற்ற திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் கோவில் நிர்வாகம் சார்பில் நேற்று பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி காலை 5 மணி அளவில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து 6 மணியளவில் பூக்குழி இறங்குதல் தொடங்கியது.

அப்போது வரிசையில் காத்திருந்த பக்தர்கள், பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அவ்வாறு பூக்குழி இறங்கிய பக்தர்களில் ஏராளமானோர் கைகளில் குழந்தையை தூக்கிக்கொண்டும், தலையில் கரகம் சுமந்தும், அக்னி சட்டி ஏந்திய படியும் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது பூக்குழியை சுற்றி இருந்தவர்கள் பக்தி பரவசத்தில் "கோட்டைமாரி தாயே, பராசக்தி தாயே" என்று கோஷம் எழுப்பினர். மேலும் கரவொலி எழுப்பி பூக்குழி இறங்கிய பக்தர்களை உற்சாகப்படுத்தினார்.

பின்னர் வெண்ணை தாழி என்னும் சிறப்பு அலங்காரத்தில் அம்மனின் வீதிஉலா நடந்தது.

தேரோட்டம்

அதைத்தொடர்ந்து இரவு 7 மணி அளவில் மாசித்திருவிழா தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் நடுநாயகமாக வீற்றிருக்க தேரோட்டம் தொடங்கியது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். இந்த தேரோட்டம் நகரின் நான்கு ரதவீதிகளில் வலம் வந்து கோவிலை அடைந்தது.

இதில் நகரின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 8 மணி அளவில் கோவில் கலையரங்கில் இன்னிசை கச்சேரி நடந்தது.

Related Tags :
மேலும் செய்திகள்