திண்டுக்கல்
கோபால்பட்டி கற்பகாம்பாள்-கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
|கோபால்பட்டியில் உள்ள கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது.
கோபால்பட்டியில் உள்ள கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கற்பகாம்பாள் கோவில்
நத்தம் அருகே வேம்பார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோபால்பட்டியில் கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் கோவில் புதிதாக கட்டப்பட்டது. இந்த கோவில் வளாகத்தில் காளியம்மன், விநாயகர், சத்தியபாமா, ருக்மணி சமேத கிருஷ்ணர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகளும் உள்ளன. இந்தநிலையில் கற்பகாம்பாள்-கபாலீஸ்வரர் கோவிலில் அனைத்து பணிகளும் முடிவடைந்ததை அடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கடந்த 24-ந்தேதி மாலை கோபால்பட்டியில் உள்ள மங்கம்பட்டி விநாயகர் கோவிலில் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 28-ந்தேதி இரவு கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 1-ந்தேதி காலை 8 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜை, கணபதி பூஜையுடன் தொடங்கியது. அப்போது மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கன்னியா பூஜை, சுமங்கலி பூஜை மற்றும் பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அன்றைய தினம் மாலை 4 மணி அளவில் மங்கம்பட்டி விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்த அழைப்பு, முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதற்காக ராமேசுவரம், கொடுமுடி, காசி, திருமலைக்கேணி, உலுப்பகுடி கன்னிமார்தீர்த்தம் உள்ளிட்ட புண்ணிய தலங்களில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
கும்பாபிஷேகம்
அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 2-ம்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. மாலை 3-ம் கால யாகசாலை பூஜையும், திருமறை பாராயணம், லலிதாசகஸ்ரநாமம், மூலமந்திர ஹோமம், மகாதீபராதனை ஆகியவை நடைபெற்றன.
இந்தநிலையில் கும்பாபிஷேக நாளான நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அப்போது விநாயகர் வழிபாடு, சாமிகளுக்கு காப்பு கட்டுதல், திருமுறை பாராயணம், தனபூஜை, கோபூஜை, பிரசாதம் வழங்குதல், கடம் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னர் காலை 10 மணிக்கு சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அப்போது கருடன் வானில் வட்டமிட்டது. இதனை பார்த்த ஏராளமான பக்தர்கள் 'ஓம்சக்தி... பராசக்தி...' என பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் வழிபாடு
இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ., நத்தம் ஒன்றியக்குழு தலைவர் கண்ணன், திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. பொருளாளரும், மாவட்ட கவுன்சிலருமான க.விஜயன், தொழில் அதிபர் அமர்நாத், ஜி.டி.என். கல்லூரி நிர்வாக இயக்குனர் துரைரத்தினம், சாணார்பட்டி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் ராமராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் இளம்வழுதி, சாணார்பட்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தர்மராஜன், வேம்பார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ராஜேந்திரன், விஷ்ணுதேவி டெக்ஸ்டைல் உரிமையாளர் சந்திரசேகர், ஏழுமலையான் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் பரமானந்தம், அரவிந்தன், விவேக் பேங்கர்ஸ் உரிமையாளர் ராஜா சுகுமார், நாகம்மாள் ரியல் எஸ்டேட் உரிமையாளர் பாலசுப்பிரமணியன், கொடை பைப்ஸ் உரிமையாளர் ராஜேஷ்குமார், கனிகா பால் உரிமையாளர் ஜெயசந்திரன், கோபால்பட்டி வர்த்தக சங்க தலைவர் பூபதி, துணைத்தலைவர் சர்புதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் கும்பாபிஷேகத்தில் திண்டுக்கல், நத்தம், கோபால்பட்டி, வேம்பார்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
அன்னதானம்
விழாவிற்கான ஏற்பாடுகளை கோபால்பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் நாயுடு மகாஜன சங்க அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்திருந்தனர். முடிவில் பொதுமக்கள் அனைவருக்கும் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.