தேனி
கடமலைக்குண்டு முத்தாலம்மன், காளியம்மன், விநாயகர் கோவில்களில் கும்பாபிஷேகம்
|கடமலைக்குண்டுவில் உள்ள முத்தாலம்மன், காளியம்மன், விநாயகர் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கடமலைக்குண்டுவில் 24 சமுதாய பொதுமக்களுக்கு சொந்தமான விநாயகர், முத்தாலம்மன், காளியம்மன் ஆகிய 3 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை கடமலைக்குண்டுவில் மேளதாளங்கள் முழங்க முளைப்பாரி மற்றும் தீர்த்த ஊர்வலம் நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று காலை விநாயகர், முத்தாலம்மன், காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சைவசமய சிவாலய திருப்பணி வித்தகர், பாண்டிநாட்டு கோச்செங்கணர் பாண்டிமுனீஸ்வரர் தலைமையில் தீபாராதணை, யாகசாலை பூஜைகள், அனுக்கை வருணம், 64 தேவதைக்கு மூல மந்திர ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் 108 புனித தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனிதநீர், கோவில் கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது அவர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடமலைக்குண்டுவில் உள்ள 2 தனியார் திருமண மண்டபங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவில், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதற்கான ஏற்பாடுகளை கடமலைக்குண்டு கிராம கமிட்டி தலைவர் டி.கே.ஆர்.கணேசன், செயலாளர் நல்லாசிரியர் கோவிந்தன், பொருளாளர் தங்கராஜ், ஊர் பெரியதனம் பால்ராஜ் ஆகியோர் தலைமையில் 24 சமுதாய கும்பு உறுப்பினர்கள் மற்றும் விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர். இதில், குறிஞ்சி ரெடிமேட்ஸ் உரிமையாளர் மாடசாமி, கடமலை ஆனந்தம் ரெடிமேட்ஸ் உரிமையாளர் கருப்பசாமி, மலையாண்டி ஜூவல்லர்ஸ் உரிமையாளர் ரமேஷ், கோபுரம் கோக்கனட்ஸ் உரிமையாளர்கள் சிவா, ஈஸ்வரன், முந்திரி வியாபாரி ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.