< Back
மாநில செய்திகள்
எரியோடு அருகே முத்தாலம்மன் கோவில் திருவிழா
திண்டுக்கல்
மாநில செய்திகள்

எரியோடு அருகே முத்தாலம்மன் கோவில் திருவிழா

தினத்தந்தி
|
12 July 2023 2:30 AM IST

எரியோடு அருகே முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

எரியோடு அருகே கே.ராமநாதபுரத்தில் பகவதியம்மன், காளியம்மன், மாரியம்மன், முத்தாலம்மன், பட்டாளம்மன், செல்வவிநாயகர், முனியப்பசாமி ஆகிய தெய்வங்களுக்கு கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 9-ந்தேதி அம்மன் கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. பின்னர் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது.

நேற்று முன்தினம் ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது ஒரு பக்தர், காளியம்மன் வேடமிட்டு 12 அடி நீளமுள்ள அலகு குத்தி வந்தார். அதன்பிறகு மாலையில் வாணவேடிக்கையுடன அம்மன் மின்னொளி ரத ஊர்வலம் நடைபெற்றது. மேலும் முத்தாலம்மன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கோவில் முன்பு சுமார் 50 அடி உயரமுள்ள கழுமரம் ஊன்றப்பட்டது. பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் போட்டிப்போட்டு கழுமரம் ஏறினர். அங்கு சுற்றியிருந்த பார்வையாளர்கள், கழுமரம் மீதும், அதன்மீது ஏறிய இளைஞர்கள் மீதும் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

இதனால் இளைஞர்கள் பலரும் கழுமரம் ஏற முடியாமல் வழுக்கி கீழே விழுந்தனர். இருப்பினும் சுமார் 3 மணி நேரம் போராடிய இளைஞர் ஒருவர், கழுமரம் உச்சிக்கு ஏறி அங்கு இலக்காக மஞ்சள் துணியில் கட்டி வைத்திருந்த பணமுடிப்பை எட்டி பறித்தார். அவரே கழுமரம் ஏறும் போட்டியில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு மாலையில் மஞ்சள் நீராட்டு மற்றும் அம்மன் கரகம் பூஞ்சோலை கொண்டு செல்லும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைந்தது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்