திண்டுக்கல்
திண்டுக்கல்லில் பூத்தேர்களில் அம்மன் வீதிஉலா
|திண்டுக்கல்லில் உள்ள 3 காளியம்மன் கோவில்களில் திருவிழா தொடங்கியதையொட்டி நேற்று பூத்தேர்களில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
திண்டுக்கல்லில் உள்ள 3 காளியம்மன் கோவில்களில் திருவிழா தொடங்கியதையொட்டி நேற்று பூத்தேர்களில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
பூத்தேர்களில் வீதிஉலா
திண்டுக்கல்லில், பழனி சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் வடக்குத்தெரு காளியம்மன், முனிசிபல் காலனி நெட்டுத்தெருவில் உள்ள சக்தி காளியம்மன், தாடிக்கொம்பு சாலையில் உள்ள பி.வி.தாஸ் காலனி வீரசக்தி காளியம்மன் ஆகிய கோவில்களில் உற்சவ திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி 3 கோவில்களிலும் கொடிமரம் ஊன்றுதல் மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடந்தது.
இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பூச்சொரிதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அம்மன் எழுந்தருளி பூத்தேர்கள் அலங்கரிக்கப்பட்டனர். பின்னர் திண்டுக்கல் மலையடிவாரம் உள்ள கோட்டைகுளத்தில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 3 பூத்தேர்கள் வீதிஉலா செல்ல தயாராகின. அப்போது 3 தேர்களிலும் வெவ்வேறு அம்மன்கள் எழுந்தருளினர். பின்னர் பூத்தேர் ஊர்வலம் தொடங்கி, திண்டுக்கல் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி சென்றது.
பால்குட ஊர்வலலம்
மேலும் பூத்தேர்களுடன் ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக நடந்து சென்றனர். மேலும் செல்லாண்டியம்மன் கோவில் வடக்குத்தெரு காளியம்மன் கோவிலுக்கு 8 பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் 21 அடி நீள அலகு குத்தி ஊர்வலமாக சென்றனர். பின்னர் நேற்று இரவு அனைத்து கோவில்களிலும் வாணவேடிக்கையுடன் கரகம் ஜோடிக்கப்பட்டு, கரக ஊர்வலம் நடந்தது.
இதற்கிடையே பொங்கல் வைத்தல், திருவிளக்கு பூஜை, பூக்குழி இறங்குதல், முளைப்பாரி ஊர்வலம், கிடாவெட்டு ஆகிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற உள்ளது. திருவிழா ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.