< Back
மாநில செய்திகள்
கொள்ளிடம் பகுதி கிராமங்களில் காமதகன விழா
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

கொள்ளிடம் பகுதி கிராமங்களில் காமதகன விழா

தினத்தந்தி
|
9 March 2023 6:45 PM GMT

கொள்ளிடம் பகுதி கிராமங்களில் காமதகன விழா நடந்தது.

கொள்ளிடம் பகுதி கிராமங்களில் காமதகன விழா நடந்தது.

மன்மதன் தகனம்

முன்பு ஒரு காலத்தில் சிவபெருமான் தவம் செய்தபோது அந்த தவத்தை மன்மதன் கலைத்தான். அப்போது வெகுண்டெழுந்த சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணை திறந்து மன்மதனை தகனம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன.

இதை நினைவுகூரும் விதமாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சந்தப்படுகை, குன்னம், மாதிரவேலூர், எடமணல், வேட்டங்குடி, கடவாசல், பச்சை பெருமாநல்லூர், மாதானம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் காமதகன விழா ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறுவது வழக்கம்.

வீதி உலா

அதன்படி இந்த ஆண்டு காமதகன விழா கொள்ளிடம் பகுதி கிராமங்களில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அப்போது பள்ளி மாணவர்கள் சிவன், மன்மதன், ரதி (மன்மதனின் மனைவி) போல் வேடம் அணிந்து சிவபெருமான், மன்மதனை தகனம் செய்த நிகழ்வை தத்ரூபமாக நடித்து காட்டினர்.

விழாவை முன்னிட்டு கொள்ளிடம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. மன்மதன் ரதத்தில் அமர்ந்து கிராமங்களில் வீதி உலா வருதல், ரதி-மன்மதன் குறித்த நாடகங்கள், கொள்ளிடம் ஆற்றில் மன்மத உருவத்தை கரைத்தல், மன்மதன் மீண்டும் உயிருடன் வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தன.

விழாக்கோலம்

விழாவையொட்டி கொள்ளிடம் பகுதி கிராமங்கள் விழாக்கோலம் பூண்டிருந்தன. காமதகன விழா கொண்டாடுவதால் மழை வளம் பெருகும், நோய்நொடி இல்லாத வாழ்வு அமையும் என கிராம மக்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்