< Back
மாநில செய்திகள்
சீர்காழியில் 36 ஆண்டுகளுக்கு பிறகு   குமரகோவில் குடமுழுக்கு
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

சீர்காழியில் 36 ஆண்டுகளுக்கு பிறகு குமரகோவில் குடமுழுக்கு

தினத்தந்தி
|
7 Nov 2022 6:45 PM GMT

சீர்காழியில் குமரகோவில் குடமுழுக்கு 36 ஆண்டுகளுக்கு பிறகு தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடந்தது.

சீர்காழியில் குமரகோவில் குடமுழுக்கு 36 ஆண்டுகளுக்கு பிறகு தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடந்தது.

குமர கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஆயிரம் ஆண்டுகள் பழமையான குமர கோவில் உள்ளது.

இக்கோவிலில் வள்ளி தேவசேனா உடனாகிய குமர பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அசுரனை சம்ஹாரம் செய்ய முருகப்பெருமான் திருச்செந்தூர் சென்ற போது இரவு நேரம் வந்து விட்டதால் இங்கு இந்திரன் அமைத்த கோவிலில் தங்கியதாகவும், மறுநாள் சூரிய உதயம் ஆனதும் முருகப்பெருமான் தான் வீற்றிருந்த கோவிலின் எதிரே தடாகம் அமைக்க செய்து கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்களை அதில் வரவழைத்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த பின் பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ததாகவும் தலவரலாறு கூறுகிறது.

குடமுழுக்கு விழா

குமரனே கோவில் கட்ட ஆணையிட்டு அங்கு தானே தங்கியதால் இக்கோவில் குமரக்கோட்டம் என அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற கோவிலில் 36 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டது.

இதை முன்னிட்டு கடந்த 4-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. 4-ம் கால யாகசாலை பூஜை நேற்று நடந்தது. அதன் பின்னர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது.

விழாவில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சுவிட்சர்லாந்து விஷ்ணு துர்க்கை கோவில் பீடாதிபதி சரவணபவ சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடமுழுக்கை தொடர்ந்து முருகப்பெருமானுக்கு சிறப்பு, அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதில் டாக்டர் முத்துக்குமார், நகரசபை தலைவர் துர்கா ராஜசேகரன், முன்னாள் நகரசபை தலைவர் கனிவண்ணன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மார்கோனி, நகராட்சி ஆணையர் வாசுதேவன், நகர மன்ற உறுப்பினர்கள் வள்ளி முத்து, ஜெயந்தி பாபு, நித்யாதேவி பாலமுருகன், கேபிள் பாலமுருகன், சீர்காழி ரோட்டரி சங்க தலைவர் சங்கர், தமிழக சொத்து பாதுகாப்பு குழு நிர்வாகி பாலசுப்பிரமணியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்