< Back
மாநில செய்திகள்
சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் குடமுழுக்கு
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் குடமுழுக்கு

தினத்தந்தி
|
22 Aug 2022 4:46 PM GMT

சீர்காழி சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சீர்காழி சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சொர்ணாகர்ஷண பைரவர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தேவாரப்பாடல் பெற்ற சட்டநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சட்டநாதருக்கு எதிரே அஷ்ட பைரவர்கள் சன்னதி அமைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக வயிரவன் கோடி என்று அழைக்கப்படும் இடத்தில் பைரவர்களில் ஒருவரான சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் அமைந்துள்ளது. இதனால் காசிக்கு இணையான பைரவர் தலமாக சீர்காழி விளங்கி வருகிறது.

நாள் தோறும் சொர்ணாகர்ஷண பைரவரை வழிபட்டால் வியாபாரம் பெருகி செல்வம் செழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ்தினமும் இக்கோவிலிலுக்கு வந்து பைரவரை வழிபடுகிறார்கள்.

குடமுழுக்கு விழா

பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் குடமுழுக்கு விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 17-ந் தேதி பூர்வாங்க பூஜையும், 20-ந் தேதி முதல் கால யாகசாலை பூஜையும் தொடங்கியது. நேற்று 4-ம் கால யாகசாலை பூஜை முடிவடைந்ததும், யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடந்தது. அதைத்தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கோவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது.

இதில் தருமபுரம் ஆதீனம் கட்டளை தம்பிரான் சுவாமிகள், வர்த்தக சங்க தலைவர் சிவசுப்பிரமணியன், வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குடமுழுக்கு விழாவையொட்டி சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்