திருவாரூர்
திருவாரூர் கமலாம்பாள் தேர் கட்டுமான பணிகள் தீவிரம்
|ஆடிப்பூர தேரோட்டத்தையொட்டி திருவாரூர் கமலாம்பாள் தேர் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
திருவாரூர்;
ஆடிப்பூர தேரோட்டத்தையொட்டி திருவாரூர் கமலாம்பாள் தேர் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஆடிப்பூர விழா
திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. பெரிய கோவில், திருமூலட்டானம், பூங்கோவில் என இக்கோவிலை அழைக்கிறார்கள். இங்கு மூலவராக வன்மீகநாதர் என்ற புற்றிடங்கொண்டாரும், உற்சவராக தியாகராஜரும் அருள்பாலித்து வருகிறார்கள்.சப்த விடங்க தலங்களில் முதன்மையான தலமாகவும், பஞ்சபூத தலங்களில் பூமிக்கான தலமாகவும் திருவாரூர் தியாகராஜர் கோவில் திகழ்கிறது. இங்கு பங்குனி உத்திர திருவிழா மற்றும் திருவாதிரை திருவிழா சமயங்களில் தியாகராஜரின் பாத தரிசன நிகழ்ச்சி சிறப்பாக நடக்கிறது. ஆழித்தேர், கமலாலய குளம் என பல்வேறு சிறப்புகளை கொண்ட திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆண்டுதோறும் கமலாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூர விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
தேர் கட்டும் பணி
இந்த ஆண்டு ஆடிப்பூர விழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆடிப்பூர தேரோட்டம் 21-ந் தேதி(வெள்ளிக்கிழமை) மாலை நடக்கிறது. விழாவையொட்டி கேடக உற்சவம், இந்திர வாகனம், பூத வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனம், கைலாச வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதி உலா நடக்கிறது.இவ்வாறு தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில், வெயிலில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் கோவில் வளாகம் மற்றும் கோவிலின் வெளிபகுதிகளிலும் பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.குறிப்பாக தேரின் கட்டுமான பணிகள் பாதிக்காமல் இருக்கவும், பாதுகாப்பாக நடத்தவும் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தற்போது தேர் கட்டும் பணி நடந்து வருகிறது. சுமார் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுவருகின்றனர். தேரோட்டத்துக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் தேர் கட்டுமான பணிகளை பணியாளர் தீவிரமாக செய்து வருகின்றனர்.தேர் கட்டுமான பணிக்கு 2 லாரிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மூங்கில் கம்புகள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது ஆழித்தேரை போல 20-க்கும் மேற்பட்ட பனங்கம்புகளை கொண்டு கமலாம்பாள் தேரில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. தேருக்கு முட்டுக்கட்டை ஏற்கனவே தயார் நிலையில் உள்ளது. தற்போது தேர்கட்டும் பணியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.