நாமக்கல்
பாண்டமங்கலத்தில்பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் தேர்த்திருவிழா தொடக்கம்
|பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே பாண்டமங்கலத்தில் உள்ள அலமேலு மங்கா, கோதாநாயகி சமேத பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவிலில் தேர்த்திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு அங்குரார்பணம், திருமுளைபாலிகை இடுதலும், நேற்று மதியம் பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடந்தது. இதையடுத்து அன்ன வாகனத்தில் சாமி திருவீதி உலா வருதல் நடைபெற்றது.
விழாவில் இன்று (சனிக்கிழமை) முதல் 27-ந் தேதி வரை தினந்தோறும் காலை பல்லக்கு உற்சவமும், இரவு 7 மணிக்கு சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், பெரிய திருவடி கருடசேவை, சேஷ வாகனம், யானை வாகனம், திருக்கல்யாண உற்சவம், புஷ்ப விமான புறப்பாடு மற்றும் குதிரை வாகனங்களில் சாமி முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
28-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளளும், மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 29-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை காலை 8 மணிக்கு பல்லக்கு உற்சவமும், இரவு 7 மணிக்கு வராக புஷ்கரணியில் தீர்த்தவாரி, கெஜலட்சுமி வாகனம், வசந்த உற்சவம், புஷ்ப யாகம் மற்றும் படிச்சட்டத்தில் சுவாமி திருவீதி உலா புறப்பாடும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயலர் அலுவலர், தக்கார், விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.