தர்மபுரி
பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
|கார்த்திகை மாத பிரதோஷத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பிரதோஷ வழிபாடு
தர்மபுரியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் கார்த்திகை மாத பிரதோஷத்தையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சாமி மற்றும் நந்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி நெசவாளர் நகர் மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவிலில் சாமி மற்றும் நந்திக்கு பால், தேன், சந்தனம், விபூதி, தயிர் மற்றும் பழங்கள் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு உபகார பூஜைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜூன சாமி கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு சாமி மற்றும் நந்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்திலேயே சாமி உற்சவம் நடந்தது. இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் சமேத மருதவனேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆனந்த நடராஜர் கோவில்
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவில், ஆத்துமேடு சர்வாங்க சுந்தரி அம்பாள் சமேத நஞ்சுண்டேஸ்வரர் கோவில், சவுலுப்பட்டி மங்களாம்பிகை உடனாகிய ஆதிலிங்கேஸ்வரர் கோவில், தர்மபுரி தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள பிரகதாம்பாள் உடனாகிய அருளீஸ்வரர் கோவில், மதிகோன்பாளையம் சிவன் கோவில், வெண்ணாம்பட்டி மாதேஸ்வரன் கோவில் மற்றும் நகரை சுற்றியுள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் ஒகேனக்கல் காவிரி அம்மன் உடனாகிய தேசநாதேஸ்வரர் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், காரிமங்கலம் மலையில் உள்ள அருணேஸ்வரர் கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் கார்த்திகை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
பாப்பிரெட்டிப்பட்டி
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பையர்நத்தம் கிராமத்தில் மயிலைமலை ஸ்ரீ பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த மலைக்கோயில் அடிவாரத்தில் ஸ்ரீ அமிர்தேஸ்வரர், ஸ்ரீ அமிர்தாம்பிகை கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. நந்தி பெருமானுக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், தேன், இளநீர், எலுமிச்சை, தயிர், அபிஷேக பொடி உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நந்தி பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பையர்நத்தம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.