< Back
மாநில செய்திகள்
தேளூர் ஊராட்சி நிர்வாகம் 4 வாரத்திற்குள் 15 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்-நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
அரியலூர்
மாநில செய்திகள்

தேளூர் ஊராட்சி நிர்வாகம் 4 வாரத்திற்குள் 15 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்-நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

தினத்தந்தி
|
8 Sept 2022 12:04 AM IST

தேளூர் ஊராட்சி நிர்வாகம் 4 வாரத்திற்குள் 15 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

8 வழக்குகள் தள்ளுபடி

அரசுத்துறைகள் மீதான 6 வழக்குகள் உள்பட 10 வழக்குகளில் அரியலூர் மாவட்ட நுகர்வோர் ஆணைய நீதிபதி டாக்டர் வீ.ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இவற்றில் 8 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 2 வழக்குகளில் அரசு அலுவலர்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அரியலூர் மாவட்டம், தேளூர் கிராமத்தில் வசிக்கும் பொய்யாமொழி (வயது 54), வேல்விழி (43), கோவிந்தராஜ் (52), முருகேசன் (53), பாரிவள்ளல் (55), அம்பிகா (48), அருட்செல்வம் (49) ஆகியோர் தங்களது வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புக்கோரி ஊராட்சி மன்றத்தில் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களிடமிருந்து ஊராட்சி மன்றம் குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகையை கடந்த 2016-ம் ஆண்டு பெற்றுள்ளது. ஆனால் இவர்களுக்கு குடிநீர் இணைப்பை ஊராட்சி மன்றம் வழங்காத காரணத்தால் அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் ஆணைய நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பின் விவரம் வருமாறு:-

குடிநீர் இணைப்பு

வழக்கு தாக்கல் செய்து செய்துள்ளவர்கள் எவ்வித சேவை கட்டணத்தையும் ஊராட்சி மன்றத்தில் செலுத்தவில்லை. இதனால் அவர்கள் நுகர்வோர் அல்ல என்பதால் நுகர்வோர் ஆணையம் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்ற அரசின் வாதம் ஏற்புடையதல்ல. குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகை ஊராட்சி மன்றம் பெற்றுக் கொண்டவுடன் வழக்கை தாக்கல் செய்தவர்களுக்கு நுகர்வோர் என்ற அந்தஸ்து ஏற்பட்டு விட்டது. வறட்சியின் காரணமாக தனிநபர் குடிநீர் இணைப்புகளை வழங்க முடியாது என்று அரசு தரப்பில் கூறப்படும் நிலையில் அவ்வாறு இருக்க ஏன் தனி நபரிடம் வைப்புத்தொகையை பெற்றுள்ளீர்கள் என்பதற்கான பதில் ஊராட்சி மன்றத்தின் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

தேளூர் கிராமத்தில் வழக்கை தாக்கல் செய்துள்ளவர்கள் உள்பட 15 தனிநபர்களுக்கு வீட்டு குடிநீர் இணைப்பு உடனடியாக வழங்குமாறு கடந்த 2016-ம் ஆண்டு அரியலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து உடனே குடிநீர் இணைப்பு வழங்கப்படாவிட்டால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் கடிதம் அனுப்பியுள்ளார்.

சேவை குறைபாடு

ஆனால் மாவட்ட கலெக்டரின் உத்தரவை மதித்து குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. குடிநீர் இணைப்பு வழங்க வைப்பு தொகையை பெற்றுக்கொண்டு மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்த பின்பும் அதனை மதிக்காமல் குடிநீர் இணைப்பு வழங்காமல் உள்ள ஊராட்சி மன்றம் சேவை குறைபாடு புரிந்துள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

வழக்கை தாக்கல் செய்துள்ள அனைவரது வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பை 4 வார காலத்திற்குள் தேளூர் கிராம ஊராட்சி செயலாளர் வழங்க வேண்டும் என்றும் அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் இதனை கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டரின் உத்தரவை மதிக்காத ஊராட்சி செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. உத்தரவை செயல்படுத்த தவறினால் வழக்கை தாக்கல் செய்துள்ள ஒவ்வொருவருக்கும் தலா ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பூர்வீக சொத்துக்கள்...

அரியலூர் மாவட்டம், அயன் ஆத்தூர் கிராமத்தில் வசிக்கும் ரவிச்சந்திரன் மனைவி பானுமதி (58) என்பவர் தனது கணவர் இறந்து விட்டதால் அவரது பூர்வீக சொத்துக்கள் எவை என்று தமக்கு தெரிவிக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு கடந்த 2019-ம் ஆண்டு மனு அளித்துள்ளார். இதற்கு பதில் தரவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மீது புகாரை அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தார். இத்தகைய அற்ப வழக்கை மாவட்ட கலெக்டர் மீது தாக்கல் செய்ததற்காக அவருக்கு கண்டனம் தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து அரியலூர் மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் செய்திகள்