சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொலைத் தொடர்பு, இணைய சேவைகள் பாதிப்பு - பொதுமக்கள் கடும் அவதி
|நெட்வொர்க் கிடைக்காததால், உறவினர்களுக்கும்,நெருங்கியவர்களுக்கும், நண்பர்களுக்கும் தொடர்பு கொள்ள முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.
சென்னை,
வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து பெய்த தொடர் மழையால் சென்னை நகரமே வெள்ளக்காடாக மாறியது. நகரின் பெரும்பாலான பகுதிகளில், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதந்தன. பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும் பாதிக்கப்பட்டது.
மேலும் மிக்ஜம் புயல் தாக்கம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். இதனிடையே மக்கள் இன்னொரு பெரிய சிக்கலையும் எதிர்கொண்டனர். சென்னை மக்கள் மொபைல் போன்களில் நெட்வொர்க் சேவைகள் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏர்டெல், ஜியோ, வோடபோன் போன்ற தொலைத்தொடர்பு சேவைகள் கிடைக்காமல் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
சார்ஜ் இருந்தும், நெட்வொர்க் கிடைக்காததால், உறவினர்களுக்கும்,நெருங்கியவர்களுக்கும், நண்பர்களுக்கும் தொடர்பு கொள்ள முடியாமல் கடும் அவதிப்பட்டனர். மேலும், வெளியூர்களில் வசிக்கும், அவர்களது உறவினர்களும், குடும்பத்தினரும், சென்னையில் உள்ளவர்களிடம் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தனர். மேலும் கூகுள் பே மூலம் பண பரிவர்த்தனை செய்ய முடியாமல் மக்கள் கலக்கம் அடைந்தனர். புயல் நிலவரம் குறித்து அறியமுடியாமலும் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
மிக்ஜம் புயல் சென்னையை விட்டு விலகி, ஆந்திராவை நோக்கிச் சென்ற பிறகு, சென்னையில் மழை ஓய்ந்து, வெயில் அடிக்கத் தொடங்கி உள்ளது. பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடிந்துள்ளது. ஆனாலும், இன்னும் நெட்வொர்க் பிரச்சினை தீரவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட நெட்வொர்க் சேவைகளை தொலை தொடர்பு நிறுவனங்கள் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
"புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னையின் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், கடந்த 2 நாட்களாகவே, தொலைத்தொடர்பு சேவைகளுக்கு தற்காலிக ஜெனரேட்டர் மற்றும் பேட்டரி வசதியுடன் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. செல்போன் சிக்னல் கோபுரங்களின் கீழ் அமைக்கப்பட்டிருந்த பேட்டரிகள், கடுமையான மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால், நெட்வொர்க் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால், யூசர்களால் போன் செய்ய முடியாத நிலை உள்ளது. இந்த பிரச்சினையை தவிர்க்க, பேட்டரிகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், காலை முதல் பல்வேறு இடங்களுக்கும் மின்சாரமும் வழங்கப்பட்டு வருவதால், ஒவ்வொரு பகுதியாக தற்போது சிக்னல் பிரச்சினை தீர்ந்து வருகிறது. பெரும்பாலானோருக்கு, இப்போது நெட்வொர்க் பிரச்சினை தீர்ந்திருக்கும். விரைவில் அனைத்து பகுதிகளிலும் நிலைமை சீரடையும்" என ஏர்டெல் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.