< Back
மாநில செய்திகள்
பிரிவினைவாத கருத்துக்கள் அதிகம் வர ஆரம்பமாகியிருக்கும் நேரத்தில்.... - தமிழ்நாடு கவர்னரின் கருத்துக்கு புதுச்சேரி கவர்னர் தமிழிசை விளக்கம்
மாநில செய்திகள்

'பிரிவினைவாத கருத்துக்கள் அதிகம் வர ஆரம்பமாகியிருக்கும் நேரத்தில்....' - தமிழ்நாடு கவர்னரின் கருத்துக்கு புதுச்சேரி கவர்னர் தமிழிசை விளக்கம்

தினத்தந்தி
|
6 Jan 2023 7:49 PM IST

நான் தமிழ்நாட்டை சேர்ந்தவள் தான்... எனது மொழி தாய் மொழி... எனது மாநிலம் தமிழ்நாடு என்று புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

திருச்சி,

சென்னை கிண்டியில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை உள்ளது. தமிழ்நாட்டில் தவறான, எதிர்மறையான அரசியல் அணுகுமுறைகள் இருக்கின்றன. இது ஒழிக்கப்பட வேண்டும். இந்தியா என்பது ஒரே நாடு. தமிழ்நாடு என்று சொல்வதை விட 'தமிழகம்' என்று சொல்வதே சரியாக இருக்கும்' என்றார்.

தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என் ரவி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கவர்னரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியின் 'தமிழகம்' என்ற பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த தமிழிசை சவுந்தரராஜன், அவர் (தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி) கூறிய உட்பொருளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிரிவினைவாத கருத்துக்கள் அதிகமாக இப்பொழுது வர ஆரம்பமாகியிருக்கும் நேரத்தில் அவர் (ஆர்.என்.ரவி) அதை கூறியுள்ளார்.

அவர் சொல்வதில் தன்நாடு என்று எல்லோரும் உணர்ந்துகொள்ள வேண்டும். பாரத தேசத்தை தனிநாடு என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. தமிழ்நாடு தன் நாடு... தன்னாட்டிற்குள் ஒரு தன்நாடு என்று எடுத்துக்கொள்ள வேண்டும் தனிநாடு என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற ஒரு அர்த்தத்தில் அவர் (ஆர்.என்.ரவி) கூறியிருக்கிறார் என்று தான் நான் எடுத்துக்கொள்கிறேன்.

ஏனென்றால் சமீபகாலத்தில் சில அரசியல் தலைவர்களாக இருக்கட்டும், சில இயக்கங்களின் தலைவர்களாக இருக்கட்டும் அவர்கள் பிரிவினைபேசுவது அதிகமாகி வருகிறது. ஏதோ தமிழ்நாடு தனிநாடு போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடக்கூடாது... அது தன்னாட்டின் தன்னாடாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் (ஆர் என் ரவி) பேசியிருக்கிறார். அவர் எந்த கருத்தில் பேசியிருக்கிறார் என்றுதான் நாம் எடுத்துக்கொள்ல வேண்டும்.

நான் தமிழ்நாட்டை சார்ந்தவள் தான்... எனது மொழி தாய்மொழி... எனது மாநிலம் தமிழ்நாடு... எனது தேசம் பாரததேசம்... இந்த எண்ணம் இல்லாமல் இதில் எந்த விதத்திலும் எதுவும் துண்டாடப்பட்டுவிடக்கூடாது என்பது தான்... துண்டாடப்படுவது கொண்டாடப்பட்டும்விடக்கூடாது... நாம் அனைவரும் இணைந்து தான் இருக்க வேண்டும் என்பதை அவர் மறுபடியும் வலியுறுத்திருக்கிறார். நாம் பாரததேசத்தில் ஒரு அங்கம் தான். அது அகமாக இருந்தாலும் சரி அங்கமாக இருந்தாலும் சரி... நாம் பாரததேசத்தின் அங்கம்...' என்றார்.

மேலும் செய்திகள்