திருச்சி
வாலிபர்களை தாக்கி 6 பவுன் நகை-மோட்டார் சைக்கிள் பறிப்பு
|வாலிபர்களை தாக்கி 6 பவுன் நகை-மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
சங்கிலி பறிப்பு
திருச்சி சின்னகோதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுஜித் (வயது 25). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் தனது நண்பர் ஹரிபிரசாத்தை ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். கோரையாற்று பாலம் அருகே வந்தபோது, 3 பேர் அவர்களை வழிமறித்து தகராறு செய்தனர். மேலும் சுஜித் தலையில் கல்லால் தாக்கி, அவருடைய மோட்டார் சைக்கிள், செல்போன், 1½ பவுன் சங்கிலி மற்றும் ஹரிபிரசாத் அணிந்திருந்த 4½ பவுன் சங்கிலி ஆகியவற்றை பறித்துச்சென்றனர்.
இதுகுறித்து சுஜித் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டது கருமண்டபம் பகுதியை சேர்ந்த அர்ஜுன் (23), அவருடைய நண்பர்கள் கார்த்திக் மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அர்ஜுனையும், சிறுவனையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும், செல்போனையும் மீட்டனர். தலைமறைவாக உள்ள கார்த்திக்கை தேடி வருகின்றனர்.
மசாஜ் சென்டரில் விபசாரம்
*திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள மசாஜ் சென்டரில் கோட்டை போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு இளம்பெண்ணை வைத்து அங்கு விபசாரம் நடப்பது தெரியவந்தது. அந்த பெண்ணை மீட்ட போலீசார், காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக சூர்யா என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு பகுதியில் குழுமணி சாலையில் லாட்டரி சீட்டுகள் விற்ற அண்ணா நகரை சேர்ந்த பர்ஹத்துல்லா(46), பாலக்கரையை சேர்ந்த ஜாகிர் உசேன்(58), முகமது இஸ்மாயில் ஆகியோர் மீது தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். தப்பியோடிய முகமது இஸ்மாயிலை தேடி வருகிறார்கள். இதேபோல் எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் கள்ளத்தனமாக லாட்டரி விற்ற தென்னூர், சின்னச்சாமி நகரை சேர்ந்த ஆனந்த்(36) மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
2 பேர் மாயம்
*திருச்சி பெரியமிளகுபாறை பகுதியை சேர்ந்த ஜெயபால்-இந்திரா தம்பதியின் மகள் பவித்ரா(வயது 23). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வந்தார். சம்பவத்தன்று தனது தோழியின் திருமணத்துக்கு சேலம் செல்வதாக கூறிச்சென்ற பவித்ரா பின்னர் வீடுதிரும்பவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் செசன்சு கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிந்து, பவித்ராவை தேடி வருகின்றனர்.
இதேபோல், தென்னூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மணிகண்டனின் மகள் வினோதினி (18). இவர் சம்பவத்தன்று அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறிச்சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (37). இவருடைய மனைவி ராணி (27). மகேந்திரனுக்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், இதனால் ராணி கோபத்தில் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மகேந்திரன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3 பேர் கைது
*காட்டுப்புத்தூர் அருகே எம்.புத்தூர் காவிரி ஆற்றில் போலீசார் ரோந்து சென்றபோது, அங்கு மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்த நபர், வண்டியை நிறுத்திவிட்டு தப்பியோடினார். இதனையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்து போலீசார், இது குறித்து எம்.புத்தூரை சேர்ந்த மணிவண்ணன்(27) மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*திருவெறும்பூர் அருகே உள்ள கும்பக்குடி காட்டுவாரியில் கிராவல் மண் அள்ளிய டிராக்டரின் உரிமையாளர் சூரியூர் பட்டவெளியை சேர்ந்த தவமணி(42), கும்பகுடியை சேர்ந்த குமார் (43), புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கல்லக்குடி ஊராட்சி கடபட்டியை சேர்ந்த ரங்கசாமி (32) ஆகியோரை நவல்பட்டு போலீசார் கைது செய்து, கிராவல் மண் ஏற்றிய டிராக்டர் டிப்பர், பொக்லைன் எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.
272 மதுபாட்டில்கள் பறிமுதல்
*தா.பேட்டை பகுதியில் மதுபாட்டில் பதுக்கி வைத்திருந்த திருத்தலையூர் கிராமத்தை சேர்ந்த பெருமாளை(60) கைது செய்து, அவரிடம் இருந்து 272 மது பாட்டில்களையும், ரூ.8,470-ஐயும் தா.பேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் மேட்டுப்பாளையத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த தா.பேட்டையை சேர்ந்த சதீஷ்குமாரை(41) கைது செய்து, 99 மது பாட்டில்கள் மற்றும் மொபட்ைட பறிமுதல் செய்தனர்.
*வையம்பட்டி அருகே உள்ள கல்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல்(65). இவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த கார் மோதி படுகாயமடைந்து, மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.