சென்னை
அரியானாவில் இருந்து விமானத்தில் வந்து கைவரிசை டிரைவர் போல் நடித்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபர்கள்
|அரியானாவில் இருந்து விமானத்தில் சென்னை வந்து டிரைவர் போல் நடித்து காரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அயனாவரம் கே.எச். சாலையைச் சேர்ந்தவர் மோகன் அயானி (வயது 53). இவர், தனது காரை ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் வசிக்கும் தனது மருமகன் வீட்டுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தார். இதற்காக ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து அரியானா மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனத்தை தொடர்பு கொண்டார்.
அப்போது அந்த நிறுவனம் சார்பில், "உங்கள் காரை குறிப்பிட்ட இடத்தில் பத்திரமாக சென்று ஒப்படைக்கிறோம். காரை ஒப்படைத்த பிறகு ரூ.5 ஆயிரம் செலுத்தினால் போதும்" என கூறினர்.
அதை நம்பிய மோகன் அயானி, கடந்த டிசம்பர் மாதம் 23-ந்தேதி அந்த நிறுவனத்தில் இருந்து வந்த 2 டிரைவர்களிடம் கார் சாவியை கொடுத்தார். ஆனால் அந்த கார், சொன்னபடி அவரது மருமகன் வீட்டில் ஒப்படைக்கப்படாததால் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அந்த குறிப்பிட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, மேலும் ரூ.25 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே கார் உரிய இடத்தில் ஒப்படைக்கப்படும் என மிரட்டினர். இதுகுறித்த புகாரின் பேரில் அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் காரை செகந்திராபாத்துக்கு கொண்டு செல்லாமல் பெங்களூருவுக்கு கடத்திச்சென்றது தெரிந்தது. அங்கு சென்ற போலீசார், காரை கடத்திய அரியானவை சேர்ந்த பிரவீன் சிங் (21), ரோனக் (24) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்கள் அரியானாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து காரை பெங்களூரு கடத்திச்சென்று பணம் கேட்டு மிரட்டியதும், இதுபோல் 7 பேரிடம் டிரைவர் போல் நடித்து கார்களை கடத்தி பணம் பறித்ததும் தெரியவந்தது.