பரவை அருகே வைகை ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட வாலிபர்கள் - தேடும் பணி தீவிரம்
|பரவை அருகே வைகை ஆற்றில் குளிக்கச் சென்று மாயமான வாலிபர்களை போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.
வாடிப்பட்டி,
மதுரை தெற்கு வாசல் தில்லை நகர்சந்தில் குடியிருந்து வருபவர் சீனிவாசன் இவரது மகன் தனசேகரன்(வயது 23)எம்.எஸ்.சி பட்டதாரி. திருமங்கலத்தைச் சேர்ந்த ஞானமணி மகன் கண்ணன்(20) ஆகிய இருவரும் உறவினர்கள் பரவையில் வைகை ஆற்று புது பாலம் எதிரில் துவரிமான் பிரிவில் உள்ள சாலைக்கரை முத்தையா சுவாமி கோயிலில் இன்று மதியம் உறவினர்களுடன் சாமி கும்பிட வந்தார்கள்.
அப்போது இருவரும் குளித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு புது பாலத்திற்கு அடியில் வைகை ஆற்றுக்குள் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். இருவரும் ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு திடீரென்று எதிர்பாராத விதமாக தண்ணீரில் இவர்கள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஓடி வந்து ஆற்றுக்குள் இறங்கி தேடினர். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் வைகை ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட பட்டதாரி வாலிபர்களை தேடி வருகின்றனர்.