< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்: பட்டாசை வெடிக்கச் செய்தவாறு பைக்கில் பறந்த வாலிபர்கள் - போலீஸ் வலைவீச்சு
மாநில செய்திகள்

விழுப்புரம்: பட்டாசை வெடிக்கச் செய்தவாறு பைக்கில் பறந்த வாலிபர்கள் - போலீஸ் வலைவீச்சு

தினத்தந்தி
|
26 Oct 2022 6:59 PM IST

விழுப்புரத்தில் தீபாவளியன்று வாணவேடிக்கை பட்டாசை வெடிக்கச் செய்தவாறு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் 2 வாலிபர்கள் பறந்த சென்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது.

விழுப்புரம்:

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை கடந்த 24-ந் தேதியன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையின்போது உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி தமிழக அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தது.

இதனிடையே தீபாவளியன்று விழுப்புரம் நகரில் நள்ளிரவில் நான்குமுனை சந்திப்பு பகுதியில் இருந்து பழைய பஸ் நிலையத்தை கடந்து கிழக்கு புதுச்சேரி சாலை வரை ஒரு மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்களில் ஒருவர் வாகனத்தை வேகமாக இயக்க, பின்னால் அமர்ந்து வந்த வாலிபர், தனது கையிலிருந்தவாறு அவுட் எனப்படும் வாணவேடிக்கை பட்டாசை வெடிக்கச்செய்து சாகசம் செய்தனர். அவர்களது மோட்டார் சைக்கிள் மின்னல் வேகத்தில் செல்ல, ஒவ்வொரு பட்டாசாக வானில் சென்று வெடித்து வண்ணப்பொறிகள் பறந்தன.

இதனை பின்னால் சென்ற அவரது நண்பர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து அதனை சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். அது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியது.

இதனை சமூகவலைதளங்களில் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்து தங்கள் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். நள்ளிரவு நேரம் என்பதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்துள்ளது, இல்லையெனில் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கிய சாலைகளில் அஜாக்கிரதையாக செயல்பட்ட அவர்கள் இருவரின் மீதும் காவல்துறை தனது கடமையை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் பதிவு செய்தனர்.

இதன் அடிப்படையில் அந்த வீடியோ காட்சிகளை கொண்டும், அந்த மோட்டார் சைக்கிளின் எண்ணை கொண்டும் பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவித்தல், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதோடு அவர்கள் இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்