சென்னை
காதலித்து ஏமாற்றியதாக இளம்பெண் புகார் எதிரொலி... காதலனின் திருமணம் நிறுத்தம்
|காதலித்து திருமணம் செய்வதாக கூறி ரூ.68 லட்சம் ஏமாற்றியதாக இளம்பெண் அளித்த புகாரை தொடர்ந்து, தொழில் அதிபர் மகளுடன் அவருடைய காதலனுக்கு நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. அவரது பெற்றோரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னையை சேர்ந்த 27 வயது இளம்பெண், 10-ம் வகுப்பு படிக்கும் போது உடன் படித்த நிஷாந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் பள்ளியில் படிக்கும்போதே காதலித்து வந்தனர். பள்ளி படிப்பு முடிந்து கல்லூரியில் சேர்ந்த பிறகும் இவர்களின் காதல் தொடர்ந்தது.
அப்போது நிஷாந்த், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணுடன் பலமுறை தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பெண்ணிடம் இருந்து சிறிது சிறிதாக ரூ.68 லட்சத்தை பெற்று கொண்டதாகவும் தெரிகிறது.
இதற்கிடையில் இளம்பெண் தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தியபோது, நிஷாந்த் திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்தார். இந்தநிலையில் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் முக்கிய பொறுப்பில் உள்ள தொழில் அதிபர் ஒருவரின் மகளுடன் நிஷாந்துக்கு திருமணம் நடைபெற இருப்பதை அறிந்து இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து மதுரவாயல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது வக்கீல்களுடன் சென்று இளம்பெண் புகார் செய்தார். அதில், சிறு வயது முதலே தன்னை காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக ரூ.68 லட்சத்தை வாங்கி ஏமாற்றியதுடன், தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போகும் காதலன் நிஷாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். இந்த மனு விருகம்பாக்கம் போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பேரில் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதற்கிடையில் தொழில் அதிபர் மகளுடன் நேற்று நிஷாந்துக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் அவர் மீது இளம்பெண் போலீசில் புகார் அளித்திருப்பதை அறிந்த பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் தங்கள் மகளுடன் நிஷாந்துக்கு நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி விட்டனர். திருமணம் நின்றுபோனதை தங்கள் உறவினர்களுக்கு செல்போனிலேயே பெண் வீட்டார் குறுந்தகவல் அனுப்பி தகவல் தெரிவித்தனர்.
இந்தநிலையில் நிஷாந்த் தலைமறைவாகி விட்டார். இது தொடர்பாக நிஷாந்தின் பெற்றோரிடம் விரும்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வந்தனர். இதற்கிடையில் இந்த வழக்கு மீண்டும் மதுரவாயல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தலைமறைவாக உள்ள நிஷாந்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.