< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

நவீன கருவிகள் மூலம் தென்னை மரம் ஏறும் வாலிபர்கள்

தினத்தந்தி
|
26 Nov 2022 1:23 AM IST

ஆட்கள் பற்றாக்குறை காரணமாக நவீன கருவிகள் மூலம் தென்னை மரத்தில் ஏறி வாலிபர்கள் தேங்காயை பறித்து வருகிறார்கள்.

தென்னை மரங்கள்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி ஊராட்சி பகுதியில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. அதிலும் வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரி, வார்ப்பட்டு, ஆலவயல், அம்மன்குறிச்சி, மைலாப்பூர், பகவண்டிப்பட்டி, தொட்டியம்பட்டி, வேகுபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை மரங்கள் அதிகளவில் உள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தென்னை மரம் ஏறுவதற்கு திடமான, வலுவான வகையில் தொழிலாளர்கள் இருந்தனர். அவர்கள் தங்கள் காலில் தடை மாட்டிக் கொண்டு இடுப்பில் அரிவாள் சொருகிக்கொண்டு, தென்னை மரம் ஏறி தேங்காய், இளநீர் பறித்து வந்தனர்.

ஆட்கள் பற்றாக்குறை

காலப்போக்கில் தென்னை மரம் ஏறுவதற்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து, விவசாயிகள் நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு தென்னை மரம் ஏறும் கருவியை பயன்படுத்தி இளநீர் மற்றும் தேங்காய் பறித்து வருகிறார்கள். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா முளையூர் பகுதியை சேர்ந்த தென்னை மரம் ஏறும் தொழிலாளி சூர்யா கூறியதாவது:-

எனது தாத்தா, பாட்டன் காலங்களில் காலில் தடை மாட்டிக்கொண்டு நாள் ஒன்றுக்கு 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களில் ஏறி தேங்காய் பறிப்பார்கள். தற்போது தென்னை மரம் ஏற தொழிலாளர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். மேலும் நாள் ஒன்றுக்கு 40 மரங்கள் மட்டுமே ஏற முடிகிறது.

மானிய விலையில் கருவிகள்

இந்தநிலையில் தென்னை மரம் ஏற நவீன கருவிகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் விலை ரூ.4 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரத்து 500 வரை கிடைக்கிறது. மேலும் தமிழக அரசு தென்னை மரம் ஏறும் கருவியை அந்தந்த வேளாண் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையிலும் வழங்கி வருகிறது. நத்தம் பகுதியில் அதிகளவில் தென்னை மரங்கள் உள்ளதால் என்னைப்போன்ற தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று நவீன கருவி மூலமாகவும், தடையை கொண்டும் மரங்கள் ஏறி பிழைப்பு நடத்தி வருகிறோம்.

நவீன கருவி மூலம் மரம் ஏறும் போது பாதுகாப்போடும், உடல் சோர்வடையாமலும் இருக்கிறோம். மேலும் நாள்ஒன்றுக்கு 200 மரங்கள் ஏறினாலும் உடல் சலிக்காமல் வேலை செய்ய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்