சென்னை
படிக்கட்டில் தொங்கியபடி ரகளை நடுவழியில் இறக்கி விட்டதால் பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர்கள்
|படிக்கட்டில் தொங்கியபடி ரகளையில் ஈடுபட்டதாக நடுவழியில் இறக்கி விட்டதால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள், பஸ்சின் கண்ணாடியை கல்வீசி உடைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
ஆவடியில் இருந்து முத்தாபுதுப்பேட்டை எல்லையம்மன் கோவில் வரை செல்லும் அரசு பஸ் (தடம் எண் 61 சி) நேற்று காலை எல்லையம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஆவடி நோக்கி வந்துகொண்டிருந்தது. ஆவடி அஜய் ஸ்டேடியம் அருகே பஸ் வந்தபோது சுமார் 20 வாலிபர்கள் பஸ்சில் ஏறினர்.
அவர்கள் பஸ்சின் உள்ளே ஏறி வராமல் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். மேலும் பஸ்சில் இருந்த பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வாலிபர்கள் ரகளையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பஸ் டிரைவர் சேகர் (வயது 42), பஸ்சை நடுவழியில் நிறுத்தினார். பின்னர் படிக்கட்டில் தொங்கியபடி ரகளையில் ஈடுபட்ட வாலிபர்கள் அனைவரையும் கீழே இறக்கிவிட்டார். அதன் பிறகு பஸ்சுக்குள் இருந்த பயணிகளுடன் பஸ்சை ஓட்டிச்சென்றார்.
நடுவழியில் தங்களை இறக்கி விட்டதால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள், திடீரென கீழே இருந்த கல்லை எடுத்து பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது வீசினர். இதில் பஸ்சின் பின்புற கண்ணாடி உடைந்து நொறுங்கியது. நல்லவேளையாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் வாலிபர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து பஸ் டிரைவர் சேகர் அளித்த புகாரின்பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.