< Back
மாநில செய்திகள்
வாலிபர் கத்தியால் குத்திக்கொலை
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

வாலிபர் கத்தியால் குத்திக்கொலை

தினத்தந்தி
|
1 April 2023 6:45 PM GMT

வாலிபர் கத்தியால் குத்திக்கொலை

பீளமேடு

கோவையில் முன்விரோதம் காரணமாக வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதில் சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

முன்விரோதத்தால் மோதல்

கோவை சின்னியம்பாளையம் காவேரிநகரை சேர்ந்தவர் வடிவேல். இவருடைய மகன் புவனேஸ்வரன் (வயது 23). இவருடைய நண்பர்களான ஆர்.ஜி.புதூரை சேர்ந்த நந்தகுமார் (19), அருளானந்த நகரை சேர்ந்த சந்தோஷ் குமார் (20), சஞ்சய் என்கிற மணிகண்டபிரபு (20) உள்பட 6 பேருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜெகத் ஹரி (19), மாதவன் (20), தினேஷ் (19) மற்றும் 16, 17 மற்றும் 18 வயதுடைய 3 சிறுவர்களுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகளில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இரு தரப்பினரும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் நந்தகுமார் 17 வயது சிறுவனின் தாயாரை திட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன் தனது நண்பர்களான 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்களுடன் சென்று சின்னியம்பாளையம் பஸ்நிறுத்தம் அருகே நின்றுகொண்டு இருந்த நந்தகுமாரை தாக்கி உள்ளனர்.

கடும் வாக்குவாதம்

பொதுஇடத்தில் வைத்து தன்னை தாக்கியதால் நந்தகுமார் தனது நண்பர்களான புவனேஸ்வரன், சந்தோஷ்குமார், சஞ்சய் என்கிற மணிகண்ட பிரபு உள்பட 6 பேரை சின்னியம்பாளையம் பஸ்நிறுத்தம் அருகே வரவழைத்தார். பின்னர் அவர்கள் 17 வயது சிறுவனை தொடர்புகொண்டு ஏண்டா எங்களின் நண்பர் நந்தகுமாரை அடித்தீர்கள், நீங்கள் இப்போது எங்கு இருக்கிறீர்கள், நாங்கள் அங்கு வருகிறோம். மற்றதை நேரில் பேசிக் கொள்ளலாம் என்று கூறியதாக தெரிகிறது.

அதற்கு அந்த சிறுவன் நாங்கள் ஆர்.ஜி.புதூர் குட்டை பகுதியில் இருக்கிறோம். அங்கு வாருங்கள் என்று கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து தனது நண்பர்களுடன் நந்தகுமார் ஆர்.ஜி.புதூர் அருகே கோவில் பகுதியில் உள்ள குட்டைக்கு சென்றார். அப்போது இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கத்தியால் குத்திக்கொலை

வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ஜெயத்ஹரி, மாதவன் மறைத்து வைத்து இருந்த கத்தியை பிடுங்கி புவனேஸ்வரனின் மார்பில் குத்தினார். இதில் புவனேஸ்வரன் கீழே சரிந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது தடுக்கச் சென்ற சந்தோஷ்குமார் மற்றும் சஞ்சய் ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து 3 சிறுவர்களும் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த புவனேஸ்வரனின் நண்பர்கள் அக்கம் பக்கத்த வர்களின் உதவியுடன் காயம் அடைந்த சந்தோஷ் குமாரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கும், சஞ்சயை சிங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயங்கர சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பீளமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

சிறுவன் உள்பட 2 பேர் கைது

பின்னர் அவர்கள் அங்கு பிணமாக கிடந்த புவனேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர்.

அதில் மாதவன் மற்றும் 16 வயது சிறுவன் ஒருவரை போலீசார் நேற்று கைதுசெய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கோவையில் முன்விரோதத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்