சென்னை
நீலாங்கரையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி வாலிபர் பலி - மற்றொருவர் படுகாயம்
|நீலாங்கரையில் தாறுமாறாக ஓடிவந்த கார் மோதி வாலிபர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக காரில் வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சை மாவட்டம் அத்திவெட்டி பகுதியைச் சேர்ந்தவர் மதன் (வயது 30). இவர், சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே வெட்டுவாங்கேணி கிழக்கு கடற்கரை சாலையில் டீ கடையில் வேலை செய்து வந்தார். இவர், கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் நின்று செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார்.
அப்போது மாமல்லபுரத்தில் இருந்து திருவான்மியூர் நோக்கி சென்ற கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிவந்து சாலையோரம் நின்றிருந்த மதன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் அந்த கார் தொடர்ந்து தறிகெட்டு ஓடி, அருகில் கொடி கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நீலாங்கரையை சேர்ந்த சங்கர் (50) என்பவர் மீதும் மோதியது. இதில் படுகாயம் அடைந்த சங்கரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான காரில் வந்த சென்னை தியாகராயநகரை சேர்ந்த அன்பரசன் (25), உடன் வந்த அவருடைய நண்பர்களான நரேஷ்வரன்(25), ஆனந்த் (27), ஹிட்லர் (25) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
கைதான அன்பரசன், வேலூர் மாவட்ட போலீஸ் அதிகாரியின் மகன் என கூறப்படுகிறது. போலீசார் நடத்திய சோதனையில் காரை ஓட்டிவந்த அன்பரசன், அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்ததும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.