சென்னை
வேளச்சேரியில் கார் மோதி வாலிபர் பலி
|வேளச்சேரியில் மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
சென்னையை அடுத்த மேடவாக்கம் சி.பி.ஐ. காலனி 4-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் அரிசங்கர் குமார் (வயது 24). இவர், பி.எஸ்சி படித்துவிட்டு ராஜீவ் காந்தி சாலையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
நேற்று காலை 6 மணி அளவில் அரிசங்கர் குமார் தனது மோட்டார் சைக்கிளில் வேளச்சேரி மெயின் சாலை வழியாக வீடு திரும்பி கொண்டிருந்தார். மேடவாக்கம் தனியார் ஆஸ்பத்திரி அருகே வரும்போது முன்னால் சென்ற கார் டிரைவர், சிக்னல் செய்யாமல் திடீரென காரை திருப்பினார். அப்போது கார் மீது இவரது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்த அரிசங்கர் குமார், குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த பிரவீன்குமார் (32) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (24). இவர், நேற்று அதிகாலை தனது இருசக்கர வாகனத்தில் சிட்லபாக்கம், முதல் பிரதான சாலையில் இருந்து எம்.ஐ.டி. மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த தனியார் நிறுவன பஸ் மோதியதில் ஸ்ரீதர் தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரான முடிச்சூர், வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த வெள்ளபாண்டி (45) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.