திருட சென்ற வீட்டில் மின்சாரம் தாக்கி பலியான வாலிபர் - போலீசார் விசாரணை
|தேன்கனிக்கோட்டையில் நள்ளிரவில் திருட சென்ற வீட்டில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை எம்ஜிஆர் தெருவில் நள்ளிரவு நேரத்தில் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் அங்குள்ள பல்வேறு வீடுகளின் கதவுகளை பூட்டி விட்டு திருட முயன்றுள்ளது. அப்போது அந்த கும்பலில் உள்ளவர்கள் அங்குள்ள வீடுகளின் மேல் தாவி குதித்து ஒடியுள்ளனர்.
இதில் அப்பகுதியை சேர்ந்த மாது என்பவரது ஆஸ்பெட்டாஸ் சீட் வீட்டின் மேல் அவர்கள் ஓடிய போது வீட்டின் மேலே சென்ற மின்சார ஒயரில் இருந்த மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சூளகிரி பகுதியை சேர்ந்த மன்சூர் என்ற 18 வயது வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது உடல் ஆஸ்பெட்டாஸ் சீட்டை உடைத்து கொண்டு வீட்டுக்குள் தொங்கிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் அப்பகுதிக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து உயிரிழந்த வாலிபரின் உடலை மீட்ட போலீசார் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மன்சூருடன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட உடன் சென்றவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.