தேனி
தவறி விழுந்து வாலிபர் படுகாயம்: தொட்டி பாலத்தில் குளிக்க தடை
|வாலிபர் தவறி விழுந்து படுகாயம் அடைந்ததால் 18-ம் கால்வாய் தொட்டி பாலத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டது
லோயர்கேம்ப் மின் நிலையம் அருகே, 18-ம் கால்வாய் தலை மதகு பகுதி அமைந்துள்ளது. இந்த கால்வாயில், கடந்த 14-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கூடலூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தையொட்டி தொட்டி பாலம் வழியாக செல்கிறது. இந்த இடம், இயற்கை எழில் சூழ்ந்து பசுமையாக காட்சி அளிக்கும். அதனை கண்டு ரசிப்பதற்காகவும், பாலத்தில் குளிப்பதற்காகவும் கூடலூர் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்வாா்கள்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் தொட்டி பாலத்தில் குளிக்கும்போது தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். இதனால் பொதுப்பணித்துறையினர் அந்த இடத்தை ஆபத்தான பகுதி என்று குறிப்பிட்டு, அங்கு குளிக்க தடை விதித்து அறிவிப்பு பலகை வைத்து உள்ளனர். அறிவிப்பை மீறி வருபவர்களை தடுப்பதற்காக, கூடலூர் தெற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.