< Back
மாநில செய்திகள்
காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை - தாம்பரத்தில் பரபரப்பு
மாநில செய்திகள்

காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை - தாம்பரத்தில் பரபரப்பு

தினத்தந்தி
|
2 Feb 2024 6:23 AM IST

குண்டுமேடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை வாலிபர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

சென்னை,

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ஜீவா (வயது 24). கானா பாடல் பாடி, மேளம் அடிக்கும் தொழில் செய்து வந்தார். இவர், குண்டுமேடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அவரது பெற்றோர், வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். அந்த மாப்பிள்ளைக்கு ஜீவா, அந்த பெண்ணுடன் தான் சேர்ந்து இருக்கும் படத்தை அனுப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து பெண்ணின் தந்தை கோவிந்தராஜனுக்கு தெரிய வர, அவர் மற்றும் அவரது மகன்கள் ஜீவாவை கண்டித்தனர்.

நேற்று முன்தினம் மாலை அந்த பெண்ணுடன் பெருங்களத்தூர் ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாளம் அருகே நின்று ஜீவா பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பெண்ணின் சகோதரர்கள் அந்த பெண்ணை வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். இதை தட்டி கேட்பதற்காக ஜீவா தனது நண்பர்களுடன் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வருவதை கண்டதும், தகராறில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றுவிட்டனர்.

அதன்பிறகு மீண்டும் இரவு 11 மணி அளவில் ஜீவா, நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று தகராறு செய்தார். அப்போது பெண்ணின் சகோதரர்கள், தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஜீவாவுடன் வந்தவர்களை அடித்து விரட்டினர். அப்போது ஜீவா மட்டும் அவர்களிடம் தனியாக சிக்கிக்கொண்டார். பின்னர் பெண்ணின் சகோதரர்கள் மற்றும் நண்பர்கள், அவரை அங்குள்ள சுடுகாட்டுக்கு தூக்கிச்சென்று அரிவாளால் தலையில் வெட்டியும், தலையில் கல்லை போட்டும் கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அனைவரும் தப்பிச்சென்றுவிட்டனர்.

நேற்று காலை சுடுகாட்டில் ஜீவா கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்த பொதுமக்கள், பீர்க்கன்கரணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், ஜீவாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை தொடர்பாக இளம்பெண்ணின் சகோதரர்களான விஜய்(21), அஜித்(24), அவர்களது நண்பர் அரவிந்தன்(22) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தங்கையின் காதலுக்கு விருப்பமில்லாத நிலையில் வீடு தேடி வந்து தகராறு செய்ததால் ஆத்திரத்தில் ஜீவாவை கொலை செய்ததாக அவர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர். இந்த கொலையில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்