சென்னை
அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் வாலிபர் சாவு: அண்ணனே தம்பியை வெட்டிக்கொன்றது அம்பலம்
|மாதவரம் அருகே அண்ணன்-தம்பி தகராறில் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் வாலிபர் பலியானார். விசாரணையில் அண்ணனே தம்பியை வெட்டிக்கொன்றது தெரிந்தது.
சென்னையை அடுத்த மாதவரம் பொன்னியம்மன்மேடு திருமால் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருடைய மனைவி சூலச்சம்மா. இவர்கள் மாதவரம் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார்கள்.
இவர்களுக்கு சுரேஷ் (வயது 26), சீனிவாசன்(24), ஸ்ரீகாந்த்(20) என 3 மகன்கள். மூத்த மகன் சுரேசுக்கு பெண் பார்க்க வெங்கடேஷ் தனது மனைவியுடன் ஆந்திராவுக்கு சென்றுவிட்டார். வீட்டில் 3 மகன்கள் மட்டும் இருந்தனர். நேற்று முன்தினம் காலை திடீரென அண்ணன்-தம்பிகள் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதில் கல்லூரி மாணவரான ஸ்ரீகாந்த், வீட்டில் இருந்த அரிவாளால் தனது அண்ணன்கள் சுரேஷ், சீனிவாசன் இருவரையும் வெட்டியதாகவும், அண்ணன்கள் தாக்கியதில் அவரும் காயம் அடைந்ததாகவும் கூறப்பட்டது.
இதில் காயம் அடைந்த 3 பேரும் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஸ்ரீகாந்த், எதற்காக தனது அண்ணன்களை வெட்டினார்? என விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று சிகிச்சையில் இருந்த சுரேஷ், இயல்பு நிலைக்கு திரும்பினார். அவரிடம் போலீசார் விசாரித்தனர். அதில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சுரேஷ்தான், தனது தம்பிகள் 2் பேரையும் அரிவாளால் வெட்டிய அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
நேற்று முன்தினம் காலை தூங்கி கொண்டிருந்த சுரேஷ் திடீரென எழுந்து சமையல் அறைக்கு சென்று, அரிவாளை எடுத்து வந்து தூங்கி கொண்டிருந்த தனது தம்பிகளான சீனிவாசன் மற்றும் ஸ்ரீகாந்தை சரமாரியாக வெட்டியதாகவும், அப்போது தனக்கும் காயங்கள் ஏற்பட்டதாகவும், தான் மன அழுத்தத்தில் இருந்ததால் தனது தம்பிகளை வெட்டியதாகவும் ஒப்புக்கொண்டார்்.
இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு தம்பி ஸ்ரீகாந்த் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய மாதவரம் போலீசார், தனியார் ஐ.டி. நிறுவன ஊழியரான சுேரசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.