கன்னியாகுமரி
மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
|நாகர்கோவிலில் திருமண நிகழ்ச்சிக்காக அலங்காரம் செய்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் திருமண நிகழ்ச்சிக்காக அலங்காரம் செய்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மின்சாரம் தாக்கியது
நாகர்கோவில் அருகே மேலகிருஷ்ணன்புதூர் ஒய்.எம்.சி.ஏ.டி. நகரை சேர்ந்தவர் வினோத் (வயது 23). இவர் திருமண நிகழ்ச்சி மற்றும் கோவில் திருவிழாக்களில் மின்விளக்கு அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் பட்டகசாலியன்விளை பகுதியில் நடைபெறும் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக நேற்று மின்விளக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
சாவு
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வினோத் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமண நிகழ்ச்சிக்காக அலங்கரித்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.