< Back
மாநில செய்திகள்
கோயம்பேட்டில் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
சென்னை
மாநில செய்திகள்

கோயம்பேட்டில் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

தினத்தந்தி
|
5 Jun 2023 3:15 PM IST

கோயம்பேட்டில் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.

நண்பர்கள்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 27). இவருடைய நண்பர் முத்துப்பாண்டி (25). இருவரும் சென்னை கோயம்பேட்டில் தங்கி, அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து இருவரும் தங்கள் அறைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் அம்பத்தூரில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்தனர். மோட்டார் சைக்கிளை முத்துப்பாண்டி ஓட்டினார். பின்னால் பூபதி அமர்ந்து இருந்தார்.

லாரி சக்கரத்தில் சிக்கி பலி

கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள புதிய மேம்பாலத்தில் செல்லும்போது, முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்ற போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அவர்கள் இருவரின் கால்கள் மீதும் லாரியின் சக்கரம் ஏறி, இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கியதில் இருவரின் கால்களும் நசுங்கியது. இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பூபதி பரிதாபமாக உயிரிழந்தார். முத்துப்பாண்டி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் சரவணன் (42) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு பூங்காவனத் தோட்டத்தைச் சேர்ந்தவர் பச்சையம்மாள் (60). ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக பஸ்சில் சென்னை தங்கசாலை பஸ் நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து மற்றொரு பஸ்சில் செல்ல காத்திருந்தார்.

அப்போது பின்னால் இருந்து வந்த மாநகர பஸ் மோதியதில் கீழே விழுந்த பச்சையம்மாள் மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. படுகாயம் அடைந்த பச்சையம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்