திருவள்ளூர்
பெரியபாளையத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
|பெரியபாளையத்தில் மோட்டார் சைக்கிளில் மீது லாரி மோதிய விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வடமதுரை ஊராட்சி தல்லேரி தெருவில் வசித்து வந்தவர் சுதாகர் (வயது 35). இவருக்கு திருமணம் ஆகவில்லை. பெரியபாளையத்தில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் (லாட்ஜில்) வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பெரியபாளையத்தில் உள்ள வங்கி அருகே சென்றபோது எதிரே வந்த லாரி ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில், லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய சுதாகர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதைகண்ட லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
விபத்து குறித்து அந்த வழியாக வந்தவர்கள் பெரியபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் பலியான சுதாகரின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். தப்பி ஓடிய டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.