சென்னை
கோயம்பேடு பஸ் நிலையத்தில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
|கோயம்பேடு பஸ் நிலையத்தில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். காதல் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விஷம் குடித்து சாவு
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் (வயது 19). இவர், திருப்பூரில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்த சஞ்சீவ், கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்தபடி, சென்னையில் உள்ள உறவினரை செல்ேபானில் தொடர்பு கொண்டு தான் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து விட்டதாக தகவல் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள், கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வந்து, சஞ்சீவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுபற்றி அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னையில் வைத்து சிகிச்சை பார்க்க சிரமமாக இருந்ததால் சஞ்சீவை சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச்சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சஞ்சீவ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
காதல் விவகாரம்
இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய முயன்றனர். இதுபற்றி அறிந்த ராமநாதபுரம் மாவட்ட போலீசார், கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக கோயம்பேடு போலீசார் ராமநாதபுரம் சென்று, சஞ்சவ் உடலை மீட்டு பிேரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தற்கொலை
சஞ்சீவ், இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையை சேர்ந்த சிறுமியை காதலித்து வந்தார். திருமண ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை அழைத்துச்சென்றார். இதுபற்றி சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சஞ்சீவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தவர், மீண்டும் தனது காதலியான சிறுமியை பார்க்க கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்தார். மீண்டும் சிறுமியை அழைத்துக்கொண்டு வெளியூர் தப்பிச்செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோயம்பேடு பஸ் நிலையம் வந்தனர். அங்கு சஞ்சீவை சரமாரியாக அடித்து உதைத்த அவர்கள், சிறுமியை தங்களுடன் அழைத்துச்சென்று விட்டனர். இதனால் விரக்தி அடைந்த சஞ்சீவ், தன் மீது மீண்டும் போலீசில் புகார் அளித்து விடுவார்களோ? என்ற அச்சத்தில் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்தது தெரிந்தது.
கொலையா?
ஆனால் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சஞ்சீவ், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தனது காதலியே தனக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாக கூறிஉள்ளார். எனவே காதல் விவகாரத்தில் விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து சஞ்சீவ் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் கோயம்பேடு போலீசார், கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் இது தொடர்பாக அந்த சிறுமி மற்றும் அவரது குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.