சென்னை
போரூர் ஏரியில் குதித்து வாலிபர் தற்கொலை - தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் விபரீத முடிவு
|தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக போரூர் ஏரியில் குதித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
பூந்தமல்லி அடுத்த மேல்மனம்பேடு பகுதியை சேர்ந்தவர் வசந்தராஜ் (வயது 31). இவர் லாரிகளை வைத்து தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொழிலில் ஏற்பட்டுள்ள நஷ்டம் காரணமாக லாரிக்காக வங்கியில் வாங்கிய கடன் தொகையை சரிவர செலுத்த முடியாததால் நிதிநிறுவனம் லாரியை பறிமுதல் செய்து எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தொழிலில் வருமானம் இன்றி மன உளைச்சலில் இருந்து வந்த வசந்தராஜ், நேற்று போரூர் ஏரியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு ஏரியில் குதித்து நீரில் மூழ்கினார்.
இதனை கண்டதும் அங்கிருந்த பொதுமக்கள் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு கோயம்பேடு தீயணைப்பு அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் வந்த 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுகள் மூலம் சுமார் 1 மணி நேரமாக உடலை தேடிய நிலையில் ஏரியில் மூழ்கிய வசந்தராஜை பிணமாக மீட்டனர்.
பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வாலிபர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.