தென்காசி
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
|பாவூர்சத்திரம் அருகே, காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே, காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வாலிபர்
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டி காமராஜர் தெருவில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன், தொழிலாளி.
இவருடைய மகன் சேர்மன் (வயது 25). இவர் பேவர் பிளாக் கல் பதிக்கும் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
சேர்மன் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் மாலையில் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர்.
தூக்குப்போட்டு தற்கொலை
அப்போது, சேர்மன் ஊர் அருகே உள்ள ஒரு மாட்டு தொழுவத்தில் தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது. இது குறித்து பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து சேர்மன் உடலை கைப்பற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
காதலுக்கு எதிர்ப்பு
இறந்து போன சேர்மன், ஒரு பெண்னை காதலித்து வருவதாக கூறியுள்ளார். ஆனால், அவரது காதலுக்கு இருவர் வீட்டிலும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.