கன்னியாகுமரி
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
|நாகர்கோவிலில், காதலிக்கு வேறு நபருடன் நிச்சயதார்த்தம் முடிந்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில், காதலிக்கு வேறு நபருடன் நிச்சயதார்த்தம் முடிந்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எலக்ட்ரீசியன்
நாகர்கோவில் கோட்டார் கண்ணாக்குடி தெருவை சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி உஷா. இவர்களது மகன் அனீஸ் (வயது 25), எலக்ட்ரீசியன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மணி இறந்து விட்டார். இதையடுத்து உஷாவும், அனீசும் பழைய வீட்டில் இருந்து மாறி நாகர்கோவில் டி.வி.டி. காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் அனீஸ் தனது நண்பருடன் வெளியே செல்வதாக தாயார் உஷாவிடம் கூறிவிட்டு சென்றார். இரவில் அவர் வீட்டிற்கு வரவில்லை. நேற்று காலை வரை அவர் வீட்டுக்கு வராததால் உஷா, அனீசின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் இணைப்பு கிடைக்கவில்லை. இதனால் பதறிபோன உஷா, அனீசை பல்வேறு இடங்களில் தேடினார்.
தூக்கில் பிணம்
பின்னர் கண்ணாக்குடி தெருவில் உள்ள வீட்டிற்கு உஷா சென்று பார்த்தார். அங்கு அனீசின் காலணிகள் இருந்தன. இதனால் வீட்டினுள் அனீஸ் இருப்பது உஷாவிற்கு தெரியவந்தது. வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. சந்தேகமடைந்த உஷா வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது, அங்குள்ள ஒரு அறையில் அனீஸ் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார்.
இதனைகண்ட உஷா கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதுபற்றி கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வீட்டினுள் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காதலிக்கு நிச்சயதார்த்தம்
அனீஸ் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அனீஸ் அஞ்சுகிராமம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் இவர்களுக்கு இடையே கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அனீஸ் காதலியை சந்தித்துள்ளார். அப்போது அவர் தனக்கு வேறு ஒரு நபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ள தகவலை அனீசிடம் கூறியுள்ளார். மேலும் நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படத்தை அனீசுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகி றது. இதனால் தனது காதலி வேறு ஒருநபருக்கு நிச்சயதார்த்தமான சம்பவம் அனீசை மனதளவில் மிகவும் பாதித்து உள்ளது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.
போலீசார் விசாரணை
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அனீஸ் தனது நண்பர்களிடம் இது தொடர்பாக கூறி மிகவும் வருத்தப்பட்டு கண்கலங்கி பேசியுள்ளார். நண்பர்களும் அவரை சமாதானம் செய்துள்ளனர். பின்னர் கண்ணாக்குடியில் உள்ள வீட்டில் நண்பர்களுடன் அனீஸ் இரவு தங்கினார். நேற்று காலையில்தான் நண்பர்கள் அந்த வீட்டில் இருந்து சென்றுள்ளனர். அதற்கு முன்பு அனீசுக்கு அவர்கள் ஆறுதல் கூறியுள்ளனர்.
நண்பர்கள் சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த அனீஸ், காதலியை மறக்க முடியாமல் உயிரை மாய்த்து கொள்ளமுடிவு செய்துள்ளார். இதற்காக வீட்டில் உள்ள ஒரு அறையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மேலும் இந்த சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காதலிக்கு வேறுநபருடன் நிச்சயமானதால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.