பெரம்பலூர்
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
|வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூக்கில் தொங்கினார்
பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் தேவேந்திர குல வேளாளர் தெருவை சேர்நதவர் முருகன். இவரது மகன் சந்திரன் (வயது 22). இவர் நேற்று மதியம் தனது நண்பர்களுடன் களரம்பட்டி மருதையான் கோவில் ஒடை அருகே மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது மது போதையில் நண்பர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதனால் சந்திரன் அந்த இடத்தை விட்டு சென்றார்.
இதையடுத்து அவரது நண்பர்கள் களரம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, சந்திரன் வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர் போன் செய்து மது குடித்த இடத்தின் அருகே கருவேல மரத்தில் லுங்கியால் தூக்குப்போட்ட நிலையில் சந்திரன் தொங்குவதாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவரது நண்பர்கள் அங்கு விரைந்து சென்று சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக மோட்டார் சைக்கிளில் அம்மாபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு சந்திரனுக்கு டாக்டர் சிகிச்சை அளித்தனர்.
கண்ணாடி உடைந்தது
அப்போது அவரது நண்பர்கள் அங்கு நின்று கொண்டிருந்த 108 ஆம்புலன்சை எடுங்கள், சந்திரனை மேல் சிகிச்சைக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வோம் என்று அங்குள்ளவர்களிடம் கூறி தகராறு செய்துள்ளனர். அதற்கு டிரைவர் 108-க்கு போன் செய்தால் வருவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த நண்பர்களில் ஒருவர் ஆம்புலன்சின் முன் பக்க கண்ணாடியின் மீது கல்லை வீசினார். இதில் கண்ணாடி உடைந்தது.
பின்னர் அவர்கள் சந்திரனை மோட்டார் சைக்கிளை அழைத்து கொண்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, ஆம்புலன்ஸ் மீது கல் எறிந்த சந்திரனின் நண்பரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.