நீலகிரி
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
|தேவர்சோலை அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
கூடலூர்,
கூடலூர் தாலுகா தேவர்சோலை அருகே வட்டிக்கொல்லி பகுதியை சேர்ந்தவர் விஜயன் என்பவரது மகன் விஷாக் (வயது 28). இவரது பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். விஷாக்கின் தங்கை திருமணம் ஆகி சென்று விட்டார். இதனால் தனிமையில் விஷாக் வசித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற போது, விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதனால் கூடலூர் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வாழ்க்கையில் விரக்தி அடைந்த விஷாக் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே விஷாக் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தேவர்சோலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.