சேலம்
சேலத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
|சேலத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் தற்கொலை
சேலம் அம்மாப்பேட்டை குஞ்சாங்காட்டை சேர்ந்தவர் சரவணன். இவர், உடற்பயிற்சி கூடத்திற்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவருக்கு சக்திவேல் (வயது 18) என்ற மகனும், 2 மகள்களும் இருந்தனர். சக்திவேலுக்கு 5 வயதாக இருக்கும்போது அவனது தாய் இறந்துவிட்டார். அதன்பிறகு சிறுவனின் தந்தை சரவணன் வேறு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சக்திவேல் தனது தந்தையுடன் கடையில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை பள்ளிக்கு சென்றுவிட்டு சக்திவேலின் தங்கை வீட்டுக்கு வந்து கதவை தட்டினார். ஆனால் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் வீட்டிற்கு விரைந்து வந்த சரவணன், கதவை திறந்து பார்த்தபோது, உள்ளே மகன் சக்திவேல் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
காரணம் என்ன?
இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்சினையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்பது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.